
சட்ட நிலைமைகளை பார்க்கிலும் ஒழுக்கப் பண்பாடான சமூகம் ஒன்றை உருவாக்குவது குறித்து அனைவரும் தெளிவுடன் தமது பொறுப்புக்களை நிறைவேற்ற வேண்டியது அவசியமாகுமென்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
தனியார் வகுப்புக்கள் காரணமாக பாடசாலை பிள்ளைகளின் சமயக் கல்வி வீழ்ச்சியடைவது தொடர்பாக நேற்று முன்தினம்; ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
மிக நீண்டகாலமாக மகா சங்கத்தினர் உள்ளிட்ட சகல சமயத் தலைவர்களும் கல்விமான்களும் இது தொடர்பாக கோரிக்கைகளை முன்வைத்திருந்ததாக ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
ஞாயிற்றுக்கிழமை நாட்களில் தனியார் வகுப்புக்களை நடத்துவது தொடர்பில் மாகாண மட்டத்தில் தற்போது பல்வேறு நிகழ்ச்சித்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டபோதும் நாடளாவிய ரீதியில் பொது நிகழ்ச்சித்திட்டமொன்றின் அவசியம் குறித்து சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, எதிர்காலத்தில் இவ்விடயம் தொடர்பாக தனியார் வகுப்புகளை நடத்திவரும் ஆசிரியர்களுடன் கலந்துரையாடி அவர்களிடம் இது தொடர்பில் கோரிக்கை விடுக்க எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.
சமயக் கல்வியை கட்டாயமாக்குவது தொடர்பில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் சட்ட ஏற்பாடுகள் குறித்து ஆராய உள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
சமயக் கல்வியை பெற்றுக்கொள்வதற்கு மாணவர்களை ஊக்கப்படுத்தும் பல்வேறு நிகழ்ச்சித்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதன் அவசியத்தை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, சமயக் கல்வியின் தரத்தை மேம்படுத்துவதற்கும் சமயப் பாடசாலைகளின் வசதிகளை மேம்படுத்துவதற்கும் பின்பற்றப்பட வேண்டிய நிகழ்ச்சித்திட்டங்கள் குறித்தும் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.
சமயப் பாடசாலை ஆசிரியர்களை வலுவூட்டுவதற்காக நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய நிகழ்ச்சித்திட்டங்கள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
சமூகத்திற்கு அறிவும் ஒழுக்கப் பண்பாடும் கொண்ட மனிதர்களை வழங்குவது சமயக் கல்வியாகும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, நாளுக்கு நாள் தலைதூக்கம் வன்முறைகள் பெற்றோரையும் முதியோர்களையும் மதிக்காத சமூகம் உருவாகி வருவது தற்போதைய தலைமுறைக்கு உரியவாறு சமயக் கல்வி கிடைக்காத காரணத்தினாலேயே ஆகும் என்றும் தெரிவித்தார்.
இங்கு கருத்து தெரிவித்த மகா சங்கத்தினர் நான்கு, ஐந்து தசாப்தங்களாக இந்த நாட்டின் அனைத்து அரச தலைவர்களுடனும் இது தொடர்பாக கலந்துரையாடியபோதும் எவரும் இது தொடர்பில் உரிய நடவடிக்கையை எடுக்கவில்லை என்று தெரிவித்தனர். ஒழுக்கப்பண்பாடான சமூகத்தை மதிக்கும் தலைவர் என்ற வகையில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன , இது தொடர்பில் கவனம் செலுத்தி வருவது குறித்து மகா சங்கத்தினர் பாராட்டு தெரிவித்தனர்.
இக்கலந்துரையாடலில் பேராசிரியர் சங்கைக்குரிய நாபிரித்தன்கடவல ஞானரத்தன தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினரும் ஏனைய சமய தலைவர்களும் அமைச்சர்களான விஜேதாச ராஜபக்ஷ, அகிலவிராஜ் காரியவசம், காமினி ஜயவிக்ரம பெரேரா, ஜோன் அமரதுங்க, டி.எம்.சுவாமிநாதன், எம்.எச்.ஏ.ஹலீம், பிரதி அமைச்சர் லசந்த அழகியவன்ன மற்றும் மாகாண ஆளுநர்கள், முதலமைச்சர்கள், அமைச்சுக்களின் செயலாளர்கள்; பங்குபற்றினர்.
Post a Comment