
நேற்று வெளியான உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளுக்கு அமைய, பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்ளும் பணிகள் விரைவாக மேற்கொள்ளப்படும் என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இதற்கான கையேடுகள் அச்சிடப்பட்டுள்ள நிலையில், எதிர்வரும் தினங்களில் அவற்றை மாணவர்கள் பெற்றுக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் பிரகாரம் தாம் விண்ணப்பிக்கக்கூடிய ஆகக்கூடிய கற்கை நெறிக்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொஹான் சில்வா குறிப்பிட்டுள்ளார்.
சில மாணவர்கள் இரண்டு அல்லது 3 கற்கை நெறிகளுக்கு மாத்திரம் விண்ணப்பிப்பதால், மாணவர்களுக்கு பொருத்தமான கற்கை நெறி இல்லாமல் போகும் சந்தர்ப்பங்கள் ஏற்படுகின்றன.
ஆரம்பத்திலேயே சரியான கோரிக்கையை முன்வைக்காமையால் அந்த கற்கை நெறிக்கு விண்ணப்பிப்பதற்கு மாணவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்க முடியாதென்றும் மொஹான் சில்வா குறிப்பிட்டார்.
2019ம் ஆண்டுக்காக பல்கலைக்கழகங்களுக்கு இணைத்துக் கொள்ளும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படவுள்ளதுடன், புதிதாக சில கற்கை நெறிகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, கடந்த வருட உயர்தர பெறுபேறுகளுடன் ஒப்பிடுகையில் இந்த வருடத்தில் மாணவர்கள் சித்தியடைவு வீதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித இதனை தெரிவித்துள்ளார்.
இதன்படி பல்கலைக்கழகத்திற்கு தகுதி பெற்றவர்களின் சதவீதம் 64.68 சதவீதத்தினால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Post a Comment