Ads (728x90)

ஒரு காலத்தில் ஹிட்லர் மக்கள் அனைவரும் என்னுடன் உள்ளார்கள் என கூறி, அரசியலமைப்பினை நீக்கி புதியதொரு சட்டத்தை உருவாக்கி ஆட்சி நடவடிக்கைகளை முன்னெடுத்தார் என தெரிவித்த ரணில் விக்ரமசிங்க, அதே நிலையே இன்று இங்கு உருவாகியுள்ளது எனத் தெரிவித்தார். இந்த நிலை வன்மையாக கண்டிக்கத்தக்கது எனவும் தெரிவித்தார்.

அலரிமாளிகையில் இன்று இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியாக இருந்தாலும் சரி, ஐக்கிய தேசிய முன்னணியாக இருந்தாலும் சரி, எந்த அரசியல் கட்சியாக இருந்தாலும் ஜனநாயக கொள்கைகளின் அடிப்படையிலேயே செயற்பட வேண்டும்.

எனவே அரசியலமைப்புடன் விளையாடுவதை உடனடியாக நிறுத்த வேண்டும். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் புதிதாக அமைச்சர்கள் என வேடம் பூண்டுள்ள அனைவரும் யாப்புக்கு அமைவாக செயற்படுவதற்கான நடவடிக்கைகளை உடனடியாக முன்னெடுக்க வேண்டும் என்றார்.

நாட்டின் அரசியலமைப்பிற்கும் சட்டத்திற்கும் அமைவாகவே தேர்தல் நடத்தப்பட வேண்டும். தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றால், சட்ட ரீதியான அரசாங்கத்தை உருவாக்கிப் பாராளுமன்றத்தில் பிரேரணை நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் அவர் நேற்று அலரி மாளிகையில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்தார்.

நாட்டில் இன்று சட்ட ரீதியான அரசாங்கமொன்றை அமைக்கவேண்டியதே முதலில் செய்ய வேண்டிய பணியாகும். அதன் பின்னர் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சகல கட்சிகளையும் உள்வாங்கி, தேர்தலொன்றை நடத்துவதற்கான யோசனையொன்றை முன்வைக்க வேண்டும் என்பதே அரசியலமைப்பின் நடைமுறையாகும்.

உரிய காலத்துக்கு முன்பதாக தேர்தலை நடத்துவதாக இருந்தால் பாராளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் பிரேரணையொன்று நிறைவேற்றப்பட வேண்டும் என்று தெரிவித்த ரணில் விக்கிரமசிங்க, 2019இல் தேர்தலொன்று நடத்தப்பட வேண்டும் என்று மக்கள் விடுதலை முன்னணியும் கோரியிருப்பதையும் சுட்டிக்காட்டினார்.

எங்களுடைய வெற்றியை யாராலும் தடுக்க முடியாது. உச்ச நீதிமன்றம், மேன்முறையீட்டு நீதிமன்றம் ஆகியன வழங்கிய தீர்ப்புகளை நாங்கள் மதிக்கின்றோம் என்று மேலும் தெரிவித்துள்ளார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget