Ads (728x90)

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்று கொலம்பியா. அந்த நாட்டின் தலைநகர் பொகோட்டா. அங்கு போலீஸ் பயிற்சி பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அதன் அருகே சோதனை சாவடி ஒன்று உள்ளது. அந்த சோதனைசாவடியில், நேற்று முன்தினம் வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட கார் பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறியது.

இந்த கார் குண்டு வெடிப்பால் அந்தப் பகுதியே குலுங்கியது.

அங்கு இருந்தவர்கள் பதறியடித்தவாறு நாலாபுறமும் சிதறி ஓடினர். எங்கும் மரண ஓலம் கேட்டது. குண்டுவெடிப்பில் பலர் சிக்கினர். அவர்களது உடல்கள் சிதறி தரையில் விழுந்தன.

அந்த இடமே போர்க்களம்போல மாறிப்போனது. எங்கும் ரத்தகளறியாக காணப்பட்டது. உடனடியாக பாதுகாப்பு படையினர் அந்த இடத்தை சுற்றி வளைத்தனர். இந்த கார் குண்டுவெடிப்பில் 10 பேர் உடல் சிதறி பலியானதாக முதல்கட்ட தகவல்கள் கூறின. ஆனால் பின்னர் இந்த எண்ணிக்கை 21 ஆக உயர்ந்து விட்டது.

மேலும் 68 பேர் படுகாயம் அடைந்தனர். அவர் கள் போலீசாராலும், மீட்பு படையினராலும், பாதுகாப்பு படையினராலும் மீட்கப்பட்டு ஆம்புலன்சுகள் மூலம் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த கார் குண்டு வெடிப்பு கொலம்பியா முழுவதும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த குண்டுவெடிப்புக்கு எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இந்த குண்டுவெடிப்பு தொடர்பாக ராணுவ அமைச்சகம் விசாரணையை முடுக்கி விட்டுள்ளது.

இந்த குண்டுவெடிப்பை தொடர்ந்து கொலம்பியா அதிபர் இவான் டக், நாட்டு மக்களுக்கு டெலிவிஷனில் உரை ஆற்றினார். குண்டுவெடிப்பில் பலியானவர்களின் நினைவைப் போற்றுகிற விதத்தில் நாடு முழுவதும் 3 நாள் தேசிய துக்கம் கடைப்பிடிக்கப்படும் என அவர் அறிவித்தார்.

நாட்டின் எல்லைகளில் பாதுகாப்பை பலப்படுத்துமாறு அவர் பாதுகாப்பு படைகளுக்கு உத்தரவிட்டார்.

மேலும், “இந்த துயரமான தருணத்தில், பயங்கரவாத அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் நாட்டு மக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். இந்த குண்டுவெடிப்பில் தொடர்புடைய அனைவரையும் சட்டத்தின் பிடியில் நிறுத்துவோம். குற்றவாளி கும்பல்களுக்கு எதிரான போரை தீவிரப்படுத்த உறுதி ஏற்போம்” எனவும் கூறினார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget