அமெரிக்காவின் ஹவாயைச் சேர்ந்த 'மவி வோக்' நிறுவனம் விநாயகரின் படம் பதித்த ஷூக்களை விற்பனைக்கு வைத்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.ஆண்கள், பெண்களுக்கான ஷூக்கள், டி-ஷர்ட்டுகளிலும் இந்நிறுவனம் விநாயகரின் உருவத்தைப் பதித்துள்ளது. இது பிரபல ஆன்லைன் நிறுவனமாகும்.விநாயகர் உருவம் பதித்த ஷூக்கள், டி-ஷர்ட்டுகள், லெக்கிங்ஸ் படங்கள் அந்நிறுவனத்தின் ஆன்லைன் பக்கத்தில் பதிவேற்றப்பட்டிருந்தன. இந்தப் பொருட்களுக்கு ரூ.3,000 முதல் ரூ.5,000 வரை விலை நிர்ணயிக்கப்பட்டது. இது அமெரிக்காவில் வாழ்கின்ற இந்துக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து இந்துக்கள் கூறுகையில், ''கடவுளின் உருவத்தைக் ஷூக்களில் பதித்திருப்பது இந்து மதத்தை அவமதிக்கும் செயல். கோயில்களிலும் வீட்டின் பூஜை அறைகளிலும் வழிபடப்படும் விநாயகரின் உருவத்தைக் ஷூக்களில் பதித்திருப்பது எங்களின் உணர்வைப் புண்படுத்துகிறது. மவி வோக் நிறுவனம், தனது தயாரிப்புகளை திரும்பப் பெற வேண்டும், அத்துடன் மன்னிப்பும் கேட்க வேண்டும்'' என்று தெரிவித்துள்ளனர்.
Post a Comment