இவ்வருட இறுதிக்குள் சகல மாவட்டங்களிலும் 2,500 வீடுகளை நிர்மாணிப்பதே எமது இலக்காகும். இன்றுவரை 1,700 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன.
எஞ்சிய 800 வீடுகளையும் செப்டம்பர் மாதத்திற்குள் பூர்த்தி செய்வதற்கு திட்டமிட்டுள்ளோம் என வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாச தெரனியகலையில் நடைபெற்ற வீடமைப்புத் திட்ட அங்குரார்ப்பண வைபவத்தில் உரை நிகழ்த்துகையில் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து உரை நிகழ்த்திய அமைச்சர் சஜித் பிரேமதாச, சிவனொளி கிராம மக்களின் வீடுகளுக்கு நான் செல்லும்போது அந்த அப்பாவி மக்களின் முகமலர்ச்சியைக் கண்டு நானும் மகிழ்ந்தேன். இத்தகைய ஓர் அங்குல நிலமேனும் இல்லாத மக்களுக்கு காணிகளும், வீடுகளும் வழங்குவதைத் தவிர வேறென்ன எதிர்பார்ப்புகளை அரசியல்வாதிகள் மேற்கொள்ள முடியும். எமது வீடமைப்புத் திட்டங்கள் நான்கு கட்டங்களாக மேற்கொள்ளப்படுகின்றன.
முதலாம் கட்டமாக 2019இல் 2500 வீடுகளும், இரண்டாவது கட்டமாக 2020 இல் 5,000 வீடுகளை நிர்மாணிக்க திட்டமிட்டுள்ளோம். 2025ஆம் ஆண்டு முடியும்போது 20,000 வீடுகள் மக்களிடம் கையளிக்கப்படும். எமக்குள்ள பெரும்பிரச்சினை காணிகளை பெற்றுக்கொள்வதேயாகும். தெரனியகலை தேர்தல் தொகுதியில் பதினைந்து பெருந்தோட்ட காணிகள் தயார் நிலையில் உள்ளன. அவற்றை கூடிய விரைவில் பயன்படுத்த திட்டமிட்டுள்ளோம் எனவும் தெரிவித்தார்.
”சிவனொளி கிராமம்” எமது 171ஆவது மாதிரி கிராமமாகும். ஒரு வாரத்திற்கு குறைந்த பட்சம் ஏழு மாதிரி கிராமங்கள் திறந்து வைக்கப்பட வேண்டியுள்ளன. அடுத்து வரும் நாட்களில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி உட்பட சகல மாவட்டங்களிலும் திறப்பு விழாக்களுக்காகச் செல்லவிருக்கின்றேன்.
தெரனியகலை நகரில் விசமிகளினால் சேதப்படுத்தப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் உருவச்சிலை மீண்டும் சிறப்பாக நிறுவப்பட்டுள்ளமை மகிழ்ச்சியளிக்கின்றது. அன்னாரின் சிலையை நிறுவுவதைவிட அவரது கொள்கைகளையும், வறிய மக்கள் மீதான இன, மத, மொழி பேதமற்ற உணர்வுகளையும் அனைவரும் இதயத்தில் கொள்ளுதலே தேசத்தின் தேவை எனவும் தெரிவித்தார்.
வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சினால் பெருந்தோட்டத் துறையில் மேற்கொள்ளப்பட்ட முதலாவது மாதிரி கிராமமாகிய “சிவனொளி கிராமம்” தெரனியகல தேர்தல் தொகுதியில் அசமானகந்தை தோட்டத்தில் அமைச்சர் சஜித் பிரேமதாசவினால் திறந்து வைக்கப்பட்டது.
2014ஆம் ஆண்டு ஏற்பட்ட மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மேற்படி தோட்டத்தைச் சேர்ந்த இருபத்தைந்து குடும்பங்கள் மண்சரிவினால் சேதமுற்ற தோட்ட லயன்களின் கூரைத் தகடுகளினால் வேயப்பட்டும் தடுப்புகளாக பாவிக்கப்பட்டுமிருந்த கூடாரங்களில் கடந்த மூன்று வருடங்களாக பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் வசித்து வந்தனர்.
இவர்களுக்கு ஏழு பேர்ச் காணிகளுடனான 25 தனி வீடுகள் அமைக்கப்பட்டு வழங்கப்பட்டள்ளன. தமிழ் குடும்பங்களுக்கென நிர்மாணிக்கப்பட்ட இம்மாதிரி கிராமம் புராதன காலத்திலிருந்து சிவனொளி பாத மலை யாத்திரை மேற்கொள்ளும் வழி அமைந்துள்ள மலையடிவாரத்தில் “சிவனொளி கிராமம்” என்னும் பெயரில் உருவாக்கப்பட்டுள்ளது. சிங்கள மொழியிலும் “சிவனொளி கிராமம்” என்னும் தமிழ் பெயரே குறிப்பிடப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment