பாகிஸ்தானில் சுமார் 7 ஏக்கர் பரப்பளவில் இயங்கி வந்த ஜெய்ஷ்- இ-முகமது பயங்கரவாதிகளின் பாலகோட் பயிற்சி முகாமை கடந்த செவ்வாய்க்கிழமை இந்திய விமானப்படை குண்டுகள் வீசி அழித்தது. இதனையடுத்து பாகிஸ்தான் விமானப்படை மறுநாள் புதன்கிழமை காஷ்மீரில் உள்ள 4 இராணுவ நிலைகளை குண்டு வீசி அழிக்க முயற்சி செய்தது.
பாகிஸ்தானின் 20 அதிநவீன விமானங்கள் இந்த தாக்குதல் முயற்சியில் ஈடுபடுத்தப்பட்டன. காஷ்மீரின் பூஞ்ச், ரஜோரி மாவட்டத்துக்குள் வட்டமடித்த அந்த விமானங்களை இந்திய போர் விமானங்கள் சுற்றி வளைத்து விரட்டின. இதனால் பாகிஸ்தான் போர் விமானங்கள் தங்கள் வான் பகுதிக்குள் திரும்பின.
அப்போது இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலில் பாகிஸ்தானின் எப்-16 ரக விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டது. மேலும் 2 பாகிஸ்தான் விமானங்களை விரட்டி சென்ற போது இந்தியாவின் மிக்-21 விமானம் தாக்கப்பட்டது.
இதையடுத்து அந்த விமானத்தை ஓட்டிச் சென்ற விமானி அபினந்தன் பாராசூட் மூலம் கீழே குதித்து உயிர்தப்பினார். அவரை பாகிஸ்தான் ராணுவம் கைதியாக சிறை பிடித்தது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த அபினந்தன் போர் கைதியாக பாகிஸ்தானிடம் சிக்கிய தகவலால் பரபரப்பு ஏற்பட்டது. ஜெனீவா ஒப்பந்தத்தின் பேரில் அபினந்தன் விடுவிக்கப்பட வேண்டும் என்று தூதர் மூலம் வலியுறுத்தப்பட்டது.
இதற்கிடையே, பாகிஸ்தான் முக்கிய கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள், அபினந்தனை உடனே விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தன.
பாகிஸ்தான் ராணுவத்திடம் 3 நாட்களாக பிடிபட்டிருந்த இந்திய விமானப்படை வீரர் அபினந்தன் நேற்று மாலை வாகா எல்லையில் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment