தொழிற்சாலையில் இறைச்சியை அரைக்கும் ராட்சத கிரைண்டருக்குள் தவறுதலாக விழுந்த பென்சில்வேனியாவைச் சேர்ந்த இளம்பெண், பரிதாபமாக உயிரிழந்தார்.பென்சில்வேனியாவின் லைகமிங் கவுண்டி பகுதியைச் சேர்ந்தவர் ஜில் க்ரிநிஞ்சர். அவர் இறைச்சிகளை அரைத்துக் கிடங்கில் சேமித்து வைக்கும் எக்கனாமி லாக்கர் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.
சில தனங்களுக்கு முன்பு அவர் பணியிடத்தில் ராட்சத கிரைண்டரை மேற்பார்வை செய்துகொண்டிருந்தார். அப்போது திடீரென எதிர்பாராத விதமாக அவர் கிரைண்டருக்குள் தவறி விழுந்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து மரணத்தை விசாரிக்கும் அதிகாரி (Coroner) சார்லஸ் கீஸ்லிங் செய்தியாளர்களிடம் பேசும்போது, ''க்ரிநிஞ்சரைக் காப்பாற்ற முயன்ற இளைஞரிடம் பேசினோம். அவர் பணியில் இருக்கும்போது அருகில் இருந்து விநோதமான அலறல் சத்தம் கேட்டுள்ளது. அங்கே சென்று பார்த்த அவர், இளம்பெண் கிரைண்டருக்குள் மாட்டிக் கொண்டதை அறிந்தார்.
உடனடியாக இயந்திரத்தை நிறுத்திய அவர் 911 (எமர்ஜென்சி) எண்ணைத் தொடர்பு கொண்டார். விரைந்து வந்த மருத்துவக் குழு இளம்பெண்ணைப் பரிசோதனை செய்தது. எனினும் அதற்குள் க்ரிநிஞ்சர் கிரைண்டருக்குள் பரிதாபமாக உயிரிழந்து கிடந்தார். இதுபோன்ற சம்பவத்தை இதுவரை நான் கேட்டது இல்லை.
ராட்சத இறைச்சி கிரைண்டரைக் கழற்றிய ஊழியர்கள், மிகவும் சிரமப்பட்டு இளம்பெண்ணின் உடலைப் பிரித்து எடுத்தனர். இதற்கு சுமார் 45 நிமிடங்கள் பிடித்தது.
இறைச்சி கிரைண்டருக்குள் க்ரிநிஞ்சர் தவறி விழுந்தாரா அல்லது யாராவது பிடித்துத் தள்ளிவிட்டார்களா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது'' என்றார்.
Post a Comment