Ads (728x90)

குண்டுத் தாக்குதல்கள் சதித் திட்டத்தில் தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் ஈடுபடுகிறார்கள் என்ற எச்சரிக்கையை தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைவர் சிசிர மென்டிஸ் விடுத்திருந்தும், அது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படாதது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டுமென அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

நேற்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தை தொடர்ந்து அலரி மாளிகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பின்போதே இதனை தெரிவித்தார்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பிற்கு சற்று நேரத்திற்கு முன்னர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து இவ்விடயம் தொடர்பில் மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.

நாட்டில் இடம்பெற்ற பாரிய தாக்குதல் சம்பவம் குறித்து அரசாங்கம் கவலையடைகின்றது. இவ்விடயம் தொடர்பான பொறுப்புக்கூறலில் இருந்து அரசாங்கம் ஒருபோதும் விலகப் போவதில்லை. இத்தொடர் குண்டுத் தாக்குதல் சம்பவம் மற்றும் அதனால் ஏற்பட்ட அழிவுகள் குறித்து அரசாங்கம் முழுமையாகப் பொறுப்பேற்கின்றது.

இத்தகைய தாக்குதல் சம்பவம் இடம்பெறப் போவதாக முன்னரே எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தும் கூட, அதனைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் எவையும் மேற்கொள்ளப்படாமை குறித்து மிகுந்த கவலையடைவதுடன், நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கோருகின்றோம்.

பாரிய தாக்குதல் முன்னெடுக்கப்படவுள்ளதாக கடந்த 4 ஆம் திகதி சர்வதேச புலனாய்வுப் பிரிவொன்று அறிவுறுத்தியிருக்கின்றது.

இவ்விடயம் குறித்து எத்தகைய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன என்பது தான் தற்போதைய கேள்வியாக இருக்கின்றது. தாக்குதல் குறித்து முன்னரேயே எமக்கு அனைத்து விபரங்களும் கிடைக்கப்பெற்றிருந்தும் அதனைத் தடுக்க முடியாமல் போயுள்ளது. முதலில் இது தொடர்பிலேயே விசாரிக்க வேண்டும்.

அதற்கென நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழு இவ்விடயம் பற்றி முழுமையாக ஆராய வேண்டும். தாக்குதல் இடம்பெறப் போவதாக யாருக்கு முன்னறிவித்தல் கிடைக்கப்பெற்றது? அவை பிரதமருக்கு நேற்று வரை அறிவிக்கப்படாதது ஏன்? பாதுகாப்பு அமைச்சினால் இவ்விடயம் குறித்து முன்னெடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன? உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்.

இந்த தாக்குதல் உள்நாட்டைச் சேர்ந்த குழுவொன்றினால் மாத்திரம் நடத்தியிருக்க முடியாது. இத்தாக்குதலில் பின்னணியில் துல்லியமாகத் திட்டமிடப்பட்ட மிகப்பாரியதொரு தீவிரவாத வலைப்பின்னல் இருக்குமென்று கருதுகிறோம் என்றார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget