பேச்சுவார்த்தைக்கான கதவுகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் மக்களை வதைக்கும் வகையில் ரயில் ஊழியர்கள் செயல்படுவார்களானால் அவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து, சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பொதுமக்கள் அசௌகரியத்திற்குள்ளாகும் இத்தகைய போராட்டங்களை அனுமதிக்க முடியாது என்றும் மக்கள் நலனை கருத்தில் கொண்டு வெளிநாட்டில் இருந்தாவது சாரதிகளை கொண்டு வந்து ரயில் சேவையை நடத்துவதற்கு தாம் பின்நிற்கப் போவதில்லை என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
ரயில்வே ஊழியர்களின் சம்பளப் பிரச்சினையை தாம் ஏற்றுக் கொள்வதாக தெரிவித்த அமைச்சர், அதற்கான ஒரு முறைமையை ஏற்படுத்திக் கொள்ளவே கால அவகாசம் கோரியுள்ளதாகவும் அவர் சபையில் தெரிவித்தார்.
ஐந்து வருடங்களுக்கு முற்பட்ட இந்த பிரச்சினையை தீர்ப்பதற்கு போக்குவரத்து அமைச்சு சகல நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ள நிலையில் பொதுமக்களை பாதிக்கும் வகையில் போராட்டங்களை மேற்கொள்வது அனுமதிக்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.
அத்துடன் வேலைநிறுத்தப் போராட்டத்தை கைவிடாது எந்த பேச்சுவார்த்தைக்கும் நாம் இணங்கப் போவதில்லை. பேச்சுவார்த்தை அவசியமானால் அவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை கைவிட்டு வரவேண்டும்.
எமது கோரிக்கைக்கு செவிமடுக்காமல் ரயில்வே ஊழியர்கள் தொடர்ந்தும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவார்களானால் அதை எம்மால் பார்த்திருக்க முடியாது மக்கள் நலன் கருதி ஓய்வு பெற்றவர்களை நியமித்து இரண்டு வாரத்தில் இப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)

Post a Comment