Ads (728x90)

தேசிய பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதில் அரசாங்கம் மேலும் இழுத்தடிப்பு செய்யுமானால் சர்வதேச ரீதியில் இலங்கை புறக்கணிக்கப்பட்டு விடுமென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

மக்களால் நிராகரிக்கப்பட்ட அரசியலமைப்பு மூலமே, தாம் ஆளப்படுவதாக நேற்று சபையில் சுட்டிக்காட்டிய சம்பந்தன், இது நாட்டின் எதிர்காலத்திற்கு பெரும் தீங்காக அமையும் என்றும் தெரிவித்தார். வடக்கு,கிழக்கில் பௌத்த சூழல் ஏற்படுத்தப்படுவது அதிகரிப்பதால் தமிழ் மக்கள் அச்சப்படுகின்றனர். அத்தகைய செயல்கள் மிக நாசுக்காக மேற்கொள்ளப்படுகின்றன. நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைக்கமைய அரசியல் தீர்வு விரைவாக பெற்றுக் கொடுக்கப்படவேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு நேற்று பாராளுமன்றத்தில் கொண்டுவந்த அரசியலமைப்பு தொடர்பான சபை ஒத்திவைப்பு பிரேரணையை சமர்ப்பித்து உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்தாவது,

புதிய அரசியலமைப்பு தொடர்பில் சகல அரசாங்க காலங்களிலும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வைப் பெற்றுக் கொடுக்க ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் காலத்தில் மங்கள முனசிங்கவின் குழு நியமிக்கப்பட்டது.

அதேபோன்று மஹிந்த ராஜபக்ஷவின் காலத்தில், பேராசிரியர் திஸ்ஸ விதாரண தலைமையிலான குழு ஒன்றை அமைக்கப்பட்டது.

இத்தகைய செயற்பாடுகள் அரசியல் தீர்வுக்கான அளப்பரிய முயற்சிகளாக காணப்படுகின்றன. இந்த அறிக்கைகள் தற்போதைய அரசியலமைப்பு பேரவையின் வழிகாட்டல் குழு, நிபுணர்கள் குழுவின் அறிக்கையிலும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
நாடு சுதந்திரமடைந்து முப்பது வருடங்களின் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு உருவாக்கப்பட்டது. அரசியல் தீர்வுக்கான பேச்சுவார்த்தைகளுக்கு அந்த அமைப்பின் செயற்பாடுகள் தடையாக இருப்பதாக அப்போதைய அரசாங்கங்கள் சர்வதேசத்துக்கு தெரிவித்தன. அதற்கிணங்க சர்வதேசத்தின் உதவியுடன் புலிகளுடனான யுத்தம் தோற்கடிக்கப்பட்டது. தற்போதைய நிலையில் மஹிந்த ராஜபக்‌ஷ தமது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டியது அவசியம்.

புலிகள் அமைப்பு தோற்கடிக்கப்பட்டு பத்து வருடங்கள் கடந்து விட்ட நிலையிலும் இதுவரை அரசியல் தீர்வு வழங்கப்படவில்லை. அரசியல் தீர்வுக்கான செயற்பாடுகள் மேலும் இழுத்தடிக்கப்பட்டால் நாடு பெரும் அழிவை எதிர்கொள்ள நேரும். இந்த விடயத்தில் சர்வதேச சமூகம் வெறும் பார்வையாளராக மட்டும் இருந்துவிட முடியாது. தமிழ் மக்கள் மேலும் நீண்ட காலத்திற்கு பொறுத்திருக்க மாட்டார்கள்.

நாட்டில் வாழும் சகல மக்களுக்கும் சம அந்தஸ்து, சம உரிமை வழங்கப்பட வேண்டுமென்பதையே சர்வதேச சமவாய அறிக்கைகள் குறிப்பிடுகின்றன. சர்வதேச பொருளாதார சமவாயத்தின் அறிக்கையும் அதனையே குறிப்பிடுகின்றது.




Post a Comment

Recent News

Recent Posts Widget