Ads (728x90)

திருகோணமலை கன்னியா வெந்நீர் ஊற்று, பிள்ளையார் ஆலயம் மற்றும் மாரியம்மன் ஆலயம் ஆகியவற்றிற்கு சொந்தமான ஆதனங்களை தர்மகர்த்தா சபையே தொடர்ந்து பரிபாலிக்க திருகோணமலை மேல்நீதிமன்றம் இன்று உத்தரவிடுள்ளது. மேலும் கன்னியா பிள்ளையார் ஆலயத்தில் விகாரை அமைக்கும் பணிக்கும் இடைக்காலத் தடை விதித்தது.

திருகோணமலை கன்னியா வெந்நீர் ஊற்று, பிள்ளையார் ஆலயம் மற்றும் மாரியம்மன் ஆலயம், அதன் ஆதனங்களின் தர்மகர்த்தா சபையினால், திருகோணமலை மேல்நீதிமன்றத்தில் கடந்த 19 ஆம் திகதி எழுத்தாணை மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த மனு மீதான விசாரணை நேற்று இடம்பெற்றது. மனுதாரர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், சட்டத்தரணி கேசவன் சயந்தன் ஆகியோர் முன்னிலையாகினர்.

மனுதாரர் தரப்பு சட்டத்தரணிகளின் சமர்ப்பணங்களை தொடர்ந்து, திருகோணமலை மேல்நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளம்செழியன்  அவர்களால் இடைக்கால தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்படி கன்னியா பிள்ளையார் ஆலயத்தை இடித்து விட்டு அங்கு அமைக்கப்பட்டு வரும் விகாரையின் கட்டுமான பணிகளை உடனடியாக நிறுத்தும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.

கன்னியா வெந்நீர் ஊற்று, பிள்ளையார் ஆலயம், மாரியம்மன் ஆலயம், மற்றும் அதற்கு சொந்தமான மற்ற வழிபாட்டிடங்களிற்கு பக்தர்கள் போய் வருவதையும், சமய அனுட்டானங்கள் செய்வதையும் யாரும் தடை செய்ய முடியாது என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

கன்னியா வெந்நீர் ஊற்று, பிள்ளையார் ஆலயம், மாரியம்மன் ஆலயம், மற்றும் அதற்கு சொந்தமான மற்ற வழிபாட்டிடங்களின் பரிபாலனத்தை அதன் தர்மகர்த்தா சபை தொடர்ந்து மேற்கொள்ளவும் அனுமதியளித்துள்ளது.

Post a Comment

Recent News

Recent Posts Widget