Ads (728x90)

2025 ஆம் ஆண்டளவில் இலங்கையில் பசும் பால் உற்பத்தியை அதிகரிப்பதற்கும், பாடசாலைகளில் ஆரம்பக் கல்வி கற்கும் மாணவர்களின் போஷாக்கை மேம்படுத்தும் நோக்கத்துடனும் ஆரம்ப பாடசாலை மாணவர்களுக்கு நாளாந்தம் காலையில் பசும் பால் பக்கற் வழங்கும் தேசிய நிகழ்ச்சித் திட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று இரத்தினபுரி-கலவான கஜூகஸ்வத்த சாஸ்திரோதய வித்தியாலயத்தில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்படவுள்ளது.

ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய ´பால் நிறைந்த தேசம்´ எனும் தொனிப்பொருளின் கீழ் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சித் திட்டம் ஜனாதிபதி செயலகம் மற்றும் கிராமசக்தி மக்கள் இயக்கத்துடன் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், கல்வி அமைச்சு மற்றும் கால்நடை வள அபிவிருத்தி அமைச்சு இதற்கு பங்களிப்பு செய்கின்றது.

இந்நிகழ்ச்சியின் முதலாம் கட்டமாக தரம் ஒன்று முதல் ஐந்து வரையிலான 4 இலட்சம் மாணவ மாணவிகளுக்கு தினசரி 150 மில்லி லீற்றர் பசும் பால் வழங்கி வைப்பதுடன், சுகாதார அமைச்சின் பரிந்துரைக்கமைய சுவையூட்டப்பட்ட பாலுக்கு பதிலாக தரம் உறுதி செய்யப்பட்ட திரவப் பால் பக்கற் ஒன்று வழங்கப்படவுள்ளது. இதற்காக வருடத்திற்கு ஆயிரம் மில்லியன் ரூபாவை அரசாங்கம் ஒதுக்கீடு செய்துள்ளது.

பாடசாலை மாணவர்களிடையே காணப்படும் போஷாக்கு குறைபாட்டை நிவர்த்தி செய்வதும் பசும் பால் பயன்பாட்டை நாட்டு மக்களுக்கு பழக்கப்படுத்துவதும் இலங்கையில் பசும் பால் உற்பத்தியை மேம்படுத்துவதும் பால்மா இறக்குமதிக்காக வருடாந்தம் செலவழிக்கப்படும் 400 மில்லியன் அமெரிக்க டொலர் செலவை குறைப்பதும் இந்த தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் நோக்கமாகும்.

Post a Comment

Recent News

Recent Posts Widget