யாழில் இன்னமும் 900 ஏக்கர் காணியே விடுவிக்க வேண்டும் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.நேற்று முன்தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள வலி.வடக்கு தெல்லிப்பளைப் பிரதேச செயலர் பிரிவில் உள்ள மயிலிட்டி மீன்பிடித்துறை அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், வடக்குக் கிழக்கில் 2009-2015 வரை இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்த 35 ஆயிரம் ஏக்கர் காணிகளை விடுவித்ததோடு 2015-2019 வரை ஏறக்குறைய 45 ஆயிரத்து ஐநூற்று எண்பது ஏக்கர் காணிகளை விடுவித்துள்ளோம்.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணத்தை மீண்டும் கட்டியெழுப்ப பல்வேறு நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதுடன் அதில் ஓர் அங்கமாக மயிலிட்டி மீனவத் துறைமுகத்தின் முதலாம் கட்டப்பணிகள் பூர்த்தியாக்கப்பட்டுள்ளது.
150 மில்லியன் ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்ட மயிலிட்டித் துறைமுகத்தின் முதலாம் கட்டப்பணிகளுக்கு 37 மில்லியன் ரூபாய் பணத்தை நோர்வே அரசாங்கம் வழங்கியுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் அடிக்கல் நாட்டப்பட்ட குறித்த மீனவத் துறைமுகத்தைச் சூழவுள்ள பகுதிகளில் 200 வீடுகளை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளதோடு மீதமுள்ள 900 ஏக்கர் காணிகளையும் விடுவிக்கவுள்ளோம்.
நாடு முழுவதும் 10 ஆயிரம் வீடுகள் அமைக்கும் திட்டத்தில் வட மாகாணத்தில் ஆயிரத்து ஐநூறு வீடுகள் அமைக்கப்பட்டுள்ளது. மூவாயிரம் ஆசிரியர்கள் சேவையில் இணைக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல் பலாலி விமான நிலைய அபிவிருத்திப் பணிக்காக சிறிய நிலப்பரப்புக் காணி தேவைப்படுகின்றது. அதேபோல் 30 வருட காலமாக இயங்காமல் இருக்கின்ற சீமெந்து ஆலையை மீண்டும் இயங்க வைக்க துறைசார் அமைச்சர் ரிசாத் பதியுதீனுடன் கலந்துரையாடி வருவதாகவும் பிரதமர் ரணில் மேலும் தெரிவித்தார்.
Post a Comment