தெற்காசியாவின் அதிஉயர் கோபுரமாக வியந்து பார்க்கப்படும் தாமரைக் கோபுரம் இன்று திறந்து வைக்கப்படுகின்றது.
தாமரைக் கோபுரத்தின் முழுமையான உயரம் 356.3 மீட்டராகும். இக்கோபுரம் தென் ஆசியாவின் மிக உயரமான கோபுரமாக நிமிர்ந்து நிற்கின்றது. அத்துடன் உலகிலேயே உயரமான கோபுரங்களில் ஒன்றாக இதுவும் காணப்படுகிறது.
நாட்டின் எந்தவொரு இடத்தில் இருந்தும் கொழும்பு நகரத்திற்குள் பிரவேசிக்கும் அனைவரதும் கண்களுக்கும் தொலைதூரத்திலிருந்து தெரியக் கூடியதாக தாமரைக் கோபுரம் அமைந்துள்ளது.
இக்கோபுரம் கொழும்பு, டி. ஆர். விஜயவர்தன மாவத்தையில் பேர வாவிக்கு மிக அருகாமையில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. அதாவது லேக் ஹவுஸ் நிறுவனத்தில் இருந்து நடந்து செல்லும் தூரத்தில் அமைந்துள்ளது.
இக்கட்டடத்தின் 215 மீற்றர் உயரத்திற்கு லிப்ட் ஊடாக செல்வதற்கு சுமார் 2 நிமிடங்களே எடுக்கின்றன. இக்கோபுரத்தினால் எமது நாட்டுக்குப் புகழ் கிடைப்பதுடன் கொழும்பு நகரின் அழகை மேன்மைப்படுத்தும் கோபுரமாகவும் இது திகழும்.
தாமரைக் கோபுரத்தில் முதலாம் மாடியில் வர்த்தக் கடைத் தொகுதி நிர்மாணிக்கப்பட்டுள்ளது. மேல் பகுதியில் 400 பேர் அமரக் கூடிய மாநாட்டு மண்டபம் உள்ளது. 50 வானொலி நிலையங்கள், 50 தொலைக்காட்சி நிலையங்கள், 20 தொலைத்தொடர்பு நிலையங்களுக்கு வசதிகள், திருமண வரவேற்பு மண்டபம், ஆடம்பர அறைகள், ஹோட்டல்கள், மற்றும் கவனயீர்ப்பு பார்வையாளர் மண்டபம் உட்பட பூரண வசதிகள் நிறைந்ததாக இக்கோபுரம் காணப்படுகிறது.
அத்துடன் தொலைத் தொடர்பாடல்கள் அருங்காட்சியகம் மற்றும் உணவு விடுதி போன்றன கோபுரத்தின் அடித்தளத்தில் அமைக்கப்படுகின்றன. கோபுரத்தின் நிர்மாணப் பணிகளில் சீன தொழிலாளர்களுடன் இலங்கை ஊழியர்களும் இணைந்து பணியாற்றினர்.
தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவுக்காக நிர்மாணிக்கப்பட்ட தாமரைக் கோபுரத்துக்காக ஒதுக்கப்பட்ட மொத்த செலவினம் 104 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.
இங்கு 1500 வாகனங்களை ஒரே தடவையில் நிறுத்தி வைக்கக் கூடியதாக பாரிய வாகனத் தரிப்பிடம் ஒன்றும் வர்த்தக கட்டடத் தொகுதியும் நிர்மாணிக்கப்பட்டிருக்கின்றன.
சீனாவின் எக்சிம் வங்கியின் நிதியுதவியுடன் 104.3 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் நிர்மாணிக்கப்பட்ட தாமரைக் கோபுரம், 1148.3 அடி உயரத்தையும் 30,600 சதுர மீற்றர் விஸ்தீரணத்தையும் கொண்டதாக உள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment