தமிழ் மக்களின் பல்வேறு அரசியல் கோரிக்கைகளை முன்வைத்து இன்று இடம்பெற்ற எழுக தமிழ் பேரணிக்கு யாழ்.குடாநாட்டு மக்கள் பேராதரவை வழங்கியுள்ளனர்.
யாழ் குடாநாட்டின் பிரதான நகரங்கள் அனைத்தும் செயலிழந்துள்ளன. பொதுப்போக்குரவத்து இடம்பெறவில்லை. காலையிலேயே குடாநாடு வெறிச்சோடியது. யாழ்.குடாநாட்டின் பிரதான சந்தைகள் எதுவும் இன்று திறக்கப்படவில்லை.
பாடசாலைகள் இன்று வழக்கம் போல இயங்கும் என ஆளுநர் அறிவித்திருந்த நிலையிலும் மாணவர்கள் பாடசாலைக்கு வருகைதரவில்லை. யாழ். மத்திய பேருந்து நிலையத்தில் அரச, தனியார் பேருந்துகள் எவையும் சேவையில் ஈடுபடவில்லை. தூர பிரதேச தனியார் பேருந்துகள் மட்டும் சேவையில் ஈடுபடுகின்றன.
“சர்வதேச சமூகத்திடம் நாம் வேண்டிக்கொள்வது யாதெனில், உலகத்தின் மூத்த இனங்களில் ஒன்றான எமது தமிழ் இனத்தின் இருப்பும் அடையாளமும் இலங்கைத் தீவில் பல தசாப்த கால இன முரண்பாடு காரணமாக இல்லாமல் போகும் நிலைமை ஏற்பட்டிருப்பதை நீங்கள் கவனத்தில் கொள்ளுங்கள். ஆகவே தயவுசெய்து சர்வதேச மனித உரிமைச் சட்டங்கள், கோட்பாடுகள் மற்றும் உடன்படிக்கைகளின் அடிப்படையில் உங்களுக்கு இருக்கும் தார்மீக கடப்பாட்டை உணர்ந்து செயற்படுங்கள் என்று நாம் உங்களிடம் கோருகின்றோம்“ என தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவர் க.வி.விக்னேஸ்வரன் பேரணியின் முடிவில் இடம்பெற்ற நிகழ்வில் தெரிவித்துள்ளார்.“தமிழ் மக்கள் வடக்கு – கிழக்கு இணைந்த தமது தாயகத்தில் சுய நிர்ணய உரிமையுடன் வாழும் வகையில் இந்தியா தீர்வு ஒன்றினை கொண்டுவரும் என்று எமது மக்கள் திடமாக நம்புகின்றார்கள். இலங்கை இனப்பிரச்சினை தொடர்பில் இந்தியா இதுவரை கடைப்பிடித்து வரும் மென்போக்கு நிலையில் இருந்து விலகி தமிழ் மக்களின் இருப்பையும் அடையாளத்தையும் பாதுகாக்கும் வகையில் துணிச்சலான நடவடிக்கைகளைத் தாமதம் இன்றி எடுக்க வேண்டும் என்றும் இந்த “எழுக தமிழ்” மூலம் நாம் வேண்டுகோள் விடுக்கின்றோம்“ என்றும் அவர் தெரிவித்தார்.

Post a Comment