யாழ்ப்பாணத்தில் நேற்று ஆரம்பமான என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா கண்காட்சியை ஆரம்பித்து வைப்பதற்காக யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த பிரதமர் யாழ். நகரை மீளக்கட்டியெழுப்புவதற்கான பல்வேறு அபிவிருத்தி திட்டங்களையும் ஆரம்பித்து வைத்தார். அதற்கமைய யாழ். மாநகரசபைக்கு புதிய கட்டிடத்தை நிர்மாணிப்பதற்கான அடிக்கல்லை பிரதமர் நாட்டி வைத்தார்.
இலங்கை தமிழ் மக்களின் கேந்திர மையமாக நல்லூர் விளங்குவதாகவும், அதன் அடையாளமாக பல மாளிகைகள் இருந்தமைக்கான ஆதாரங்கள் இன்னும் காணப்படுவதாகவும் குறிப்பிட்டார். அந்த பாரம்பரியத்தோடு யாழ்.மாநகரத்தை மீளக்கட்டியெழுப்ப அனைத்து நடவடிக்கையும் எடுப்பதாக பிரதமர் உறுதியளித்தார்.
விசேடமாக பலாலி விமான நிலையத்தை யாழ்ப்பாண விமான நிலையமாக அபிவிருத்தி செய்து இந்தியாவின் சகல பிராந்தியத்திற்கும் விமான சேவைகளை ஆரம்பித்து அதன் தொடர்ச்சியாக சர்வதேச விமான சேவைகளை ஆரம்பிப்பதாகவும் குறிப்பிட்டார்.
காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை போன்ற பாரிய அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுப்பதோடு, இவ்வாறான திட்டங்களுக்கு 100 பில்லியன் ரூபா வரை முதலீடு செய்ய வேண்டுமென்றும் அது பற்றி அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடி வருவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.
யாழ்ப்பாணத்தில் தொழில் வாய்ப்புகளை உருவாக்கக் கூடிய பாரிய அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்துவதாகவும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா கண்காட்சி கூடங்களுக்கும் விஜயம் செய்த பிரதமர் அங்கு அமைக்கப்பட்டுள்ள ஊடக மத்திய நிலையத்தில் செய்தியாளர் மாநாட்டிலும் கலந்து கொண்டார்.
நாட்டின் நல்லிணக்கம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுகிறது என்பதற்கான ஓர் அடையாளமே, யாழ்.என்றபிரைஸ் ஸ்ரீலங்கா கண்காட்சி என்று பிரதமர் சுட்டிக்காட்டினார்

Post a Comment