குற்றப்புலனாய்வு பிரிவின் பணிப்பாளரான மூத்த பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஷானி அபேசேகர பணியாற்றிய போது, அவரின் கீழ் பிரதான விசாரணை அதிகாரியாக நிஷாந்த டி சில்வா பணியாற்றியிருந்தார்.
பல்வேறு சர்ச்சைக்குரிய மற்றும் முன்னாள் ஆட்சியாளர்கள் தொடர்புபட்ட வழக்குகளை துணிச்சலாக விசாரணை செய்து வந்தவர் நிஷாந்த டி சில்வா. யாழில் வித்தியா கொலை வழக்கையும் அவரே நெறிப்படுத்தியிருந்தார்.
காலி பிரதிப் பொலிஸ் மா அதிபரின் தனிப்பட்ட செயலாளராக இடமாற்றப்பட்டதை அடுத்தும், புதிய இடமாற்றத்தின் பின்னரும் பல்வேறு தரப்பினரிடமிருந்தும் வந்த அச்சுறுத்தல்கள் மற்றும் அழுத்தங்கள் காரணமாக அவர் இவ்வாறு நாட்டை விட்டு அடைக்கலம் தேடி சுவிட்சர்லாந்து நோக்கி சென்றுள்ளார்.
கடந்த வருடம் அவரை இடமாற்றம் செய்ய ஜனாதிபதி மைத்திரிபால முயன்றபோதும், பரவலான எதிர்ப்புக்கள் காரணமாக அது பின்னர் கைவிடப்பட்டது.
மேலும் இலங்கை குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் 704 அதிகாரிகள் நாட்டை விட்டு வெளியேறலாம் என தகவல் கிடைத்துள்ளதால் கொழும்பு விமானநிலையத்தில் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தியுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.
704 அதிகாரிகளின் பெயர் விபரங்கள் அடங்கிய பட்டியலொன்றை கொழும்பு விமானநிலையத்தின் குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகளிடம் சமர்ப்பித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Post a Comment