பிரேமதாசா, சந்திரிகா, மஹிந்த காலத்தில் முன்வைக்கப்பட்ட யோசனைகளின் அடிப்படையிலேயே நாம் அதிகாரப்பரவலாக்கலை மேற்கொள்ளவுள்ளோம். தமிழர்களின் பிரச்சனையை தீர்க்கவுள்ள சஜித் துரோகியென்றால், மஹிந்த ராஜபக்சவும் துரோகிதான். அவரது கால யோசனைகளின் அடிப்படையிலேயே இதனை செய்யவுள்ளோம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று வேலணையில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றியபோது தெரிவித்துள்ளார்.
இனப்பிரச்சனையை காயத்தை போல தொடர்ந்து வைத்திருக்க முடியாது. அதை தீர்த்து விட்டு முன்னோக்கி செல்ல வேண்டியுள்ளது. எமது திட்டத்தை பகிரங்கமாக முன்வைத்துள்ளோம். யாருடனும் இரகசிய ஒப்பந்தங்கள் கிடையாது. எமது யோசனையை ஏற்று வடக்கிலுள்ள அரசியல் கட்சிகள் எம்முடன் இணைந்து செயலாற்ற வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார்.
அரசியல் பிரச்சனைகளை தீர்க்க நாம் பேச்சு நடத்திக் கொண்டிருக்கிறோம். புதிய அரசியலமைப்பை முன்வைக்க எமக்க மூன்றில் இரண்டு பெரும்பான்மை இருக்கவில்லை. மொட்டு அதை தடுத்து விட்டது.
நாட்டின் இறையாண்மைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத விதத்தில் அதிகாரத்தை பகிர்வோம். பிரேமதாச, சந்திரிகா, மஹிந்த காலத்திலும் கொண்டு வரப்பட்ட அறிக்கைகளின் அடிப்படையில் தீர்வு திட்டத்தை உருவாக்குவோம். வடக்கிலும் தெற்கிலுமுள்ள எல்லோரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய விதமாக அதை செய்வோம்.
நாட்டை காட்டிக் கொடுத்ததாக யாரும் சொல்ல முடியாது. நாம் முன்வைக்கவுள்ள யோசனையில் பிரேமதாச காலத்தில் முன்வைத்த அறிக்கையிலிருந்தவை இருக்கிறது, சந்திரிகா காலத்தில் முன்வைத்த அறிக்கையிலிருந்தவை இருக்கிறது. மஹிந்த காலத்தில் முன்வைத்த அறிக்கையிலிருந்தவை இருக்கிறது.
இதை செயற்படுத்துபவர் துரோகியென்றால், மஹிந்த ராஜபக்சவும் துரோகிதான். இதற்கு வெளியில் நாம் செல்ல வேண்டியதில்லை. ஆகவே மஹிந்த ராஜபக்சவின் யோசனைகள் தொடர்பாக கோட்டாபயவிற்கு நம்பிக்கையில்லா விட்டாலும் நாங்கள் அதை நிறைவேற்றுவோம்.
காணிகளை கையளித்தல், காணாமல் போனவர்கள், நீண்டகாலமாக சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் போன்றவற்றிற்கு தீர்வு காண தயாராக உள்ளோம்.
நாங்கள் பெண்களின் அரசியல் பிரச்சனையையும் தீர்க்கவுள்ளோம். பெண்களிற்கு நாடாளுமன்றத்திலோ வேறு எங்குமோ சரியான பிரதிநிதித்துவம் இல்லை. இப்பொழுது பிரதேசசபைகளில் 25 வீதமானவர்கள் இருக்கிறார்கள். நாங்கள் மாகாணசபைகளிலும் 25 வீதமான இடஒதுக்கீடு வழங்குகிறோம். நாடாளுமன்றத்தில் தேசியப்பட்டியலில் 25 வீதமான பெண்களிற்கு வழங்கவுள்ளோம். செனட்சபையிலும் 25 வீதமான பெண்களிற்கு பிரதிநிதித்துவம் வழங்கவுள்ளோம். ஆகவே அவர்களால் தமக்காக போராட முடியும்.
யாழ்ப்பாணத்திலும் வன்னியிலும் விவசாயத்தை நவீனப்படுத்தவுள்ளோம். வறண்ட வலயத்திலும் நெல் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். புதிய பயிர்களை பயிரிட வேண்டும். எற்றுமதி விவசாயத்திற்கு செல்ல வேண்டும். மீன்பிடியையும் நவீனப்படுத்த வேண்டும். நீண்டதூரம் செல்லும் படகுகளை வழங்கவுள்ளோம். விவசாயம், மீன்பிடிக்காக குளிரூட்டப்பட்ட களஞ்சிய அறைகளை தனியாரின் துணையுடன் அமைக்கவுள்ளோம்.
நாம் யாழ்ப்பாணத்திற்கு புதிய பொருளாதாரத்தை வழங்குவோம். அதுதான் சுற்றுலா பொருளாதாரம். அதற்காக இங்கு விமான நிலையமொன்று அமைத்துள்ளோம். ஹொட்டல்கள் நிர்மாணிக்கப்படும். இந்த தீவுகளிற்கு பயணிப்பதற்கு தனியாக படகுசேவைகள் ஆரம்பிக்க முடியும். அது யாழ்ப்பாண மக்கள் செய்ய வேண்டியது. அதன்மூலம் வருமானத்தை ஈட்ட முடியும்.
தலைமன்னார் துறைமுகத்தை அபிவிருத்தி செய்யவுள்ளோம். காங்கேசன்துறை துறைமுகம் அபிவிருத்தி செய்யப்பட்டு வருகிறது. காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையில் காணி ஒதுக்கப்பட்டு தொழிற்பேட்டை அமைக்கப்படவுள்ளது. பூநகரியில் புதிய நகரம் அமைக்கப்பட்டு அங்கு பல்கலைகழகம், உயர்கல்வி நிறுவனம் அமைக்கப்படும்.
அரசியல் தீர்வுடன் வடக்கு அபிவிருத்தி செய்யப்பட வேண்டும். இதனை தீர்த்தவுடன் யாழ்ப்பாணமும், வடக்கும் ஏனைய பகுதிகளை போல விரைவில் முன்னோக்கி செல்ல வேண்டும். அவற்றை மேற்கொள்ள சஜித்தை ஜனாதிபதியாக்க அன்னப்பறவையின் முன்னால் புள்ளடியிட கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment