யாழ்.பல்கலைகழகத்திற்குள் ஆயுதங்களுடன் பொலிஸாரும், விசேட அதிரடிப்படையினரும் புகுந்தமையால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது. இந்தச் சம்பவம் நேற்று மாலை 6 மணியளவில் இடம்பெற்றது. சிறப்பு அதிரடிப்படையினர் 12 பேர் 6 மோட்டார் சைக்கிள்களிலும், பொலிஸார் இருவர் ஒரு மோட்டார் சைக்கிளிலும் வந்தனர் என்று தெரிவிக்கப்பட்டது.
மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர்கள் இருவரை சிறப்பு அதிரடிப்படையினரும் பொலிஸார் துரத்தி வந்தனர். இளைஞர்கள் இருவரும் பல்கலைக்கழக வளாகத்துக்குள் நுழைந்ததால் சிறப்பு அதிரடிப் படையினரும், பொலிஸாரும் ஆயுதங்களுடன் அவர்களை வளாகத்துக்குள் துரத்திச் சென்றனர்.
எனினும் துரத்தி வந்த இளைஞர்களைக் கண்டறியவதில் சிக்கல் ஏற்பட சிறப்பு அதிரடிப்படையினர் அங்கு கலை நிகழ்வுகளுக்காக நின்றிருந்த மாணவர்களை மிரட்டியுள்ளனர். இதனால் அத்துமீறி பல்கலைக்கழகத்துக்குள் ஆயுதங்களுடன் சிறப்பு அதிரடிப்படையினர் நுழைந்தனர் எனவும் அவர்கள் வெளியேறாத வகையில் பிரதான வாயிலை மூடுமாறும் மாணவர்கள் நிர்வாகத்திடம் வலியுறுத்தினர்.
எனினும் பிரதான வாயில் மூடப்படாத நிலையில் சிறப்பு அதிரடிப் படையினரும் பொலிஸாரும் அங்கிருந்து வெளியேறினர். இதனால் தம்மை அச்சுறுத்திய சிறப்பு அதிரடிப் படையினரை வெளியேற அனுமதித்ததாகவும் அத்துமீறி நுழைந்த சிறப்பு அதிரடிப் படையினர் அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பெருமளவு மாணவர்கள் பல்கலைக்கழகத்தின் பிரதான வாயில் கூடியுள்ளனர்.
இதேவேளை தாம் துரத்தி வந்த சந்தேகநபர்கள் இருவரும் பல்கலைக்கழக மாணவர்கள் என்று தெரிவிக்கும் பொலிஸார், அவர்கள் மதுபோதையில் வாகனம் செலுத்தி வந்ததால் துரத்திச் சென்றதாகவும் தெரிவித்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)

Post a Comment