எதிர்வரும் ஒரு மாதத்திற்குள் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களை சேர்ந்த 100,000 பேருக்கு அரச வேலைவாய்ப்பு வழங்கப்படவுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். நேற்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில், ஊடக நிறுவனங்களின் தலைவர்களுடன் நடந்த கலந்துரையாடலின்போது ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.
சொந்த நிலம், வருமானம், சமுர்த்தி கொடுப்பனவு பெறாத குடும்பங்களை சேர்ந்தவர்களிற்கே இந்த வேலைவாய்ப்புக்கள் வழங்கப்படவுள்ளன. இந்த வேலைவாய்ப்பில் கல்வித்தகுதி கருத்தில் கொள்ளப்படாது.
இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களை பொருளாதார ரீதியாக மேம்படுத்துவதாகும். மேசன்கள், தச்சர்கள் மற்றும் கைவினைஞர்கள் உருவாக்கப்பட வேண்டும். அவர்களிற்கு அரசாங்கம் பயிற்சியளிக்கும் என்றும் தெரிவித்தார்.
வேலையற்ற பட்டதாரிகளுக்கு ஆசிரியர் பயிற்சி வழங்கப்பட்டு அவர்கள் படசாலைகளில் உள்ள வெற்றிடங்களில் இணைக்கப்படுவார்கள். உலக சந்தையில் கிடைக்கும் வேலை வாய்ப்புகள் குறித்து உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், இலங்கை இளைஞர்களுக்கு உலக சந்தையில் வேலை வாய்ப்புகளுக்கு தகுதி பெறுவதற்கான வசதிகளும், வாய்ப்புகளும் வழங்கப்படும் என்று ஜனாதிபதி தெரிவித்தார்.
அண்மையில் பத்திரிகையாளர் துசிதா குமார மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்தும் கேள்வியெழுப்பப்பட்டது. இந்த விவகாரம் குறித்து ஆராய்வதாக ஜனாதிபதி தெரிவித்தார். தனது ஆட்சியின் கீழ், எந்தவொரு தவறுகளையும் சுட்டிக்காட்டி அரசாங்கத்தை விமர்சிக்க ஊடகவியலாளர்களிற்கு சுதந்திரம் உள்ளதாகவும் தெரிவித்தார்.
அரசியலமைப்பின் 19 வது திருத்தத்தை நிச்சயமாக மாற்ற வேண்டும் என்றார். அமெரிக்காவுடனான உத்தேச எம்.சி.சி ஒப்பந்தம் தொடர்பாக புதிய அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது. இது குறித்து ஆய்வு செய்ய ஒரு குழு நியமிக்கப்படும் என்று ஜனாதிபதி தெரிவித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)

Post a Comment