Ads (728x90)

கோட்டாபய ராஜபக்சவின் சிங்கள பௌத்த பேரினவாத நடவடிக்கைகள் மிகக் கேவலமானவை. இந்த நாடு சிங்கள பௌத்த மக்களுக்கே உரியது என்ற திமிருடன் அவர் செயற்படுகின்றமை மீண்டும் இன வன்முறைக்கே வழிவகுக்கும் என நவசமசமாஜக் கட்சியின் பொதுச் செயலாளர் பேராசிரியர் விக்கிரமபாகு கருணாரத்ன எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் கடந்த வெள்ளிக்கிழமை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆற்றிய கொள்கை விளக்க உரையை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளவே முடியாது. அதை நாம் அடியோடு நிராகரிக்கின்றோம். அவர் சர்வாதிகாரப் போக்கில் செயற்படுகின்றமையை அவரின் கொள்கை விளக்க உரை தெட்டத் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றது.

அரசமைப்பின் 19ஆவது திருத்தத்தையும், 13 ஆவது திருத்தத்தையும் இல்லாதொழிக்கும் வகையில் தனது சர்வாதிகாரத்தைப் பலப்படுத்த கோட்டாபய முயற்சிக்கின்றார். இதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்கவே முடியாது.

அதேவேளை சர்வதேச நாடுகளுடனும், சர்வதேச அமைப்புகளுடனும் அவர் முட்டிமோதுகின்றார். முழு உலகமும் அங்கீகரிக்கும் சுவிஸ் நாட்டின் மீது அவர் அநாவசியமான முறையில் கைவைத்துள்ளார். மனித உரிமைகளைப் பேணிப் பாதுகாக்கின்ற அதற்காகக் குரல் கொடுக்கின்ற சுவிஸ் நாட்டுடன் கோட்டாபய முட்டிமோதுகின்றமை எமது நாட்டுக்குப் பெரும் அவமானம். தமிழ்பேசும் மக்களைப் புறக்கணிக்கும் வகையில் அவர்களைப் பழிவாங்கும் வகையில் அவரின் ஒவ்வொரு நடவடிக்கைகளும் அமைந்துள்ளன.

ஜனாதிபதியின் ஜனநாயக விரோத செயற்பாடுகளுக்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சியாலும் பலமான எதிர்ப்பு நடவடிக்கைகளைத் தொடர முடியாத துர்ப்பாக்கிய நிலைமை காணப்படுகின்றது. அந்தக் கட்சிக்குள் உருவாகியுள்ள உட்கட்சி முரண்பாடுகளே அதற்குக் காரணம்.

மேலும் ஐக்கிய தேசியக் கட்சியை இனவாதப் பாதையில் பயணிக்க வைக்கும் முயற்சியில் இனவாத நிலைப்பாடுடைய பிரிவினர் திரைமறைவில் செயற்பட்டு வருகின்றமையையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

எனவே கோட்டாபயவின் சர்வாதிகாரத்துக்கு, அராஜக நடவடிக்கைகளுக்கு முடிவுகட்ட நாட்டிலுள்ள முற்போக்கு சக்திகள் அனைத்தும் ஓரணியில் திரள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget