சிங்கள பௌத்த மக்களை தவிர ஏனைய மக்கள் ஜனாதிபதி கோட்டாபாய மீது நம்பிக்கை வைக்க தயாராக இல்லை. ஒருநாட்டின் செல்வாக்கு மிக்க தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலிலே அவரது சொந்த மக்கள் அவரில் நம்பிக்கை வைக்கிறார்களா? என்பது முக்கியமானது அல்ல. மாறாக ஏனைய இன மக்கள் அவரில் நம்பிக்கை வைக்கத் தயாராக உள்ளார்களா? என்பதே முக்கியமாகும் என்று பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற அமர்வை கடந்த 3ஆம் திகதி ஆரம்பித்து வைத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆற்றிய கொள்கைப் பிரகடன உரை மீதான விவாதம் பாராளுமன்றில் நேற்று இடம் பெற்றது. அதில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடன அறிக்கையானது கடந்த மூன்று தசாப்தங்களாக ஆட்சி புரிந்த அரசுகளின் பொதுவான திசையிலிருந்து விலகிச் செல்லுகின்ற அறிகுறிகளை கொண்டிருப்பதனால் இது மிக அவதானமாக விவாதிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.
ஜனாதிபதி கடந்த நவம்பர் 16 அன்று மிக முக்கியமான வெற்றியை பெற்றுக் கொண்டார். இந்த வெற்றியில் காணப்படும் பிரச்சினைக்குரிய விடயம் யாதெனில் பெரும்பான்மையான சிங்கள பௌத்த மக்களை தவிர ஏனைய மக்கள் ஜனாதிபதியில் நம்பிக்கை வைப்பதற்குத் தயாராக இல்லை என்பதாகும்.
இதை எவ்விதத்திலும் ஜனாதிபதி மீது அவதூறு கொண்டுவரும் நோக்கில் நான் கூறவில்லை. மாறாக தேசிய நல்லிணக்கம் மற்றும் ஒன்றிணைந்த நாடாக நாம் இருக்க வேண்டுமென்பதில் கரிசனையாக இருந்தால், இத்தகைய ஒரு முக்கியமான அம்சத் தினை நாம் புறக்கணிக்க முடியாது என்பதனை சுட்டிக்காட்டவே இந்தக் கருத்தினை முன்வைக்கின்றேன்.
துரதிர்ஷ்டவசமாக இது இன்னும் நடை பெறாத ஒன்றாகவே காணப்படுகின்றது. ஜனாதிபதி தனது வெற்றிக்கு பின் வெளியிட்ட இரண்டு கருத்துக்களில் இந்த விடயம் தொடர்பில் தாம் தெளிவான விளக்கத்தோடேயே உள்ளார் என்பதை வெளிப்படுத்தியிருந்தார்.
எமது நாடானது பல்வேறு கலாசாரங்கள், மொழிகள், சமயங்கள், இனங்கள் என்பவற்றைப் பிரதிபலிக்கும் பன்முகத்தன்மை கொண்ட மக்களைக் கொண்ட ஒரு நாடு என்பதை ஏற்றுக் கொண்டு ஜனாதிபதி இந்த இடைவெளியை குறைக்க நடவடிக்கை எடுப்பார் என்பது எமது எதிர்பார்ப்பாகும் என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment