Ads (728x90)

எழுவைதீவில் இருந்து வந்த சுமார் 30 பேர் அடங்கிய குழுவொன்று நேற்று முன்தினம் வலம்புரி அலுவலகத்துக்குள் அத்துமீறி நுழைந்து அடாவடித்தனத்தில் ஈடுபட்டது.

கடந்த 9ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வலம்புரி - சங்குநாதத்தில் வெளிவந்த ஆலடி மாநாட்டில்; எழுவைதீவு முருகமூர்த்தி வித்தியாலய மாணவர்களை எழுவைதீவு றோமன் கத்தோலிக்கப் பாடசாலைக்கு மாற்றுகின்ற முயற்சியில் தீவகத்தில் உள்ள கத்தோலிக்கப் பாதிரியார் ஒருவர் முயற்சி செய்வதாகக் குறிப்பிட்டிருந்தமைக்கு ஆட்சேபனை தெரிவிப்பதாகக் கூறி, வலம்புரி அலுவலகத்துக்குள் நுழைந்த மேற்படி கத்தோலிக்க மதம் சார்ந்த சுமார் 30 பேர் கொண்ட குழு வலம்புரி அலு வலகத்தையும், வலம்புரி அலுவலக உத்தியோகத்தர்களையும் சாடும் நோக்குடன் உள் நுழைந்ததுடன்,

கத்தோலிக்க மதத்திற்கு எதிராக வலம்புரி நடந்து கொள்வதாகவும் கத்திக் குளறி கலகம் செய்தனர். கூடவே ஆலடிமாநாட்டுச் செய்தியை எழுதியவரை தமக்கு இனங் காட்டவேண்டும் என்றும் அவரைத் தாக்கப்போவதாகவும் அட்டகாசம் செய்தனர்.

பிரஸ்தாப குழுவின் அடாவடித் தனம் எல்லை மீறிய நிலையில் பொலிஸாருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து யாழ்ப் பாணப் பொலிஸ் உத்தியோகத்தர்கள் வலம்புரி அலுவலகத்துக்கு வந்து அடாவடித்தனத்தில் ஈடுபட்ட குழுவினரை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.

இதேவேளை பொலிஸார் விசாரணையில் குறித்த குழுவில் வந்திருந்த பெண்கள், ஒரு பாதிரியாரின் பெயரைக் குறிப்பிட்டு அவரே தங்களை இங்கு அனுப்பி வைத்ததாகவும் ஆலடிமாநாட்டில் வந்த செய்தி மற்றும் ஊர்காவற்றுறையில் சைவப் பெயர்களில் உள்ள வீதிகளுக்கு கத்தோலிக்கப் பெயர்களைச் சூட்டுகின்ற செய்தியை வலம்புரி பிரசுரித்தமையாலும் தாங்கள் இங்கு அனுப்பப்பட்டதாகவும் மற்றும்படி ஆலடி மாநாட்டில் வந்த  தகவல்கள் என்ன என்பதே தங்களுக்குத் தெரியாதென்றும் வலம்புரி உத்தியோகத்தர்களிடம் தெரிவித்தனர்.

கத்தோலிக்கத்துக்கு எதிராக எழுதினால், வலம்புரியை தாக்குவோம் என்றும் இவர்கள் எச்சரித்திருந்தனர். இவை தொடர்பில் எடுக்கப்படவேண்டிய சட்ட நடவடிக்கை குறித்து வலம்புரி, சட்ட ஆலோசகர்களுடன் ஆராய்ந்து வருகிறது

தீவகத்திலுள்ள பாதிரியார் ஒருவர் சைவசமயத்துக்கு எதிராக செயற்பட்டு சமய நல்லிணக்கத்துக்கு குந்தகம் செய்வது பற்றியும் அடாவடிக்குழுக்களை இயக்கி ஊடகத்துக்கு அச்சுறுத்தல் விடுகின்ற  அவரின் பயங்கரவாதப் போக்கை விளக்கி வத்திக்கானில் உள்ள திருச்சபைக்கு தெரியப்படுத்த வலம்புரி நடவடிக்கை எடுத்துள்ளது. இதேவேளை மேற்படி சம்பவம் தொடர்பில் யாழ் மறை மாவட்ட ஆயரின் கவனத்துக்கும் இவ்விடயம் கொண்டுவரப்படவுள்ளது.     






Post a Comment

Recent News

Recent Posts Widget