Ads (728x90)

தொழில்வாய்ப்பற்ற பட்டதாரிகள் மற்றும் டிப்ளோமா பட்டங்களை பெற்றுள்ளவர்களுக்கு தொழில் வழங்கும் நிகழ்ச்சித்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் “சுபீட்சத்தின் நோக்கு” கொள்கைப் பிரகடனத்திற்கேற்ப திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.

தொழிலை எதிர்பார்த்துள்ளவர்கள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள பட்டப் படிப்பொன்றை அல்லது டிப்ளோமா பாடநெறி ஒன்றினை 2019.12.31ஆம் திகதி பூரணப்படுத்தியிருக்க வேண்டும். அத்தினத்திற்கு 45 வயதிற்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும். விண்ணப்பதாரி விண்ணப்பிக்கின்ற பிரதேச செயலாளர் பிரிவில் நிரந்தரமாக வசிப்பவராகவும் மேற்படி திகதிக்கு முன்னர் ஒரு வருட காலத்திற்கு மேல் தொழிலின்றி இருப்பதாகவும் கிராமசேவை அலுவலரால் உறுதிப்படுத்தப்படுதல் வேண்டும்.

விண்ணப்பதாரிகள் விண்ணப்பங்களை உரிய முறையில் பூர்த்தி செய்து பட்டச் சான்றிதழ் அல்லது டிப்ளோமா சான்றிதழின் புகைப்படப் பிரதியையும் இணைத்து 20.02.2020 ஆம் திகதிக்கு முன்னர் இலங்கை தபால் திணைக்களத்தின் ஸ்பீட் போஸ்ட் கூரியர் சேவையின் ஊடாக அனுப்பி வைக்கப்படல் வேண்டும். சான்றிதழின் பிரதி மூலப்பிரதியுடன் ஒத்திருப்பதை சமாதான நீதவான் அல்லது சட்டத்தரணி ஒருவரினால் உறுதிப்படுத்தி இருத்தல் வேண்டும்.

விண்ணப்பங்களை ஜனாதிபதி அலுவலகத்தின் www.presidentsoffice.lk இணையத் தளத்திலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம். தொழில்வாய்ப்பற்ற பட்டதாரிகள் டிப்ளோமாதாரிகளிற்கு தொழில் வழங்கும் நிகழ்ச்சித்திட்டம் 2020, நிறுவன முகாமைத்துவ மற்றும் ஒருங்கிணைப்பு பிரிவு, ஜனாதிபதி அலுவலகம், காலி முகத்திடல், கொழும்பு – 01 என்ற முகவரிக்கு விண்ணப்பங்கள் அனுப்பி வைக்கப்படல் வேண்டும்.

கடிதத்தின் இடதுபக்க மேல் மூலையில் பட்டதாரியாயின் “பட்டதாரி / (மாவட்டத்தின் பெயர்) என்றும் டிப்ளோமாதாரி / (மாவட்டத்தின் பெயர்) என்றும் குறிப்பிடப்படுதல் வேண்டும். குறித்த திகதிக்கு பின்னர் கிடைக்கப்பெறும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

தெரிவு செய்யப்படுபவர்கள் அரச திணைக்களங்களில் இணைத்து சேவையில் ஈடுபடுத்தப்படுவர். இவர்களுக்கு ஒரு வருட கால பயிற்சி வழங்கப்படுவதுடன் பயிற்சிக்காலத்தில் ரூபா 20,000 கொடுப்பனவு வழங்கப்படும். நியமனங்கள் மாவட்ட மட்டத்தில் வழங்கப்படுவதுடன், முதலாவது நியமனம் வழங்கப்படும் மாவட்டத்தில் ஐந்து வருடங்கள் சேவை செய்வது கட்டாயமானதாகும்.

Post a Comment

Recent News

Recent Posts Widget