Ads (728x90)

இந்தியாவில்  இதுவரை கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 43 ஆக உயர்ந்துள்ளது.

சீனாவின் ஹூபே மாகாணம் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் தாக்கியது. உயிர்கொல்லியான இந்த வைரஸ் சீனா மட்டுமின்றி உலகின் 110 நாடுகளுக்கு பரவி உள்ளது. இதுவரை 3,830 பேர் பலியாகி உள்ளனர். 1 லட்சத்து 10 ஆயிரம் பேர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலி, ஈரான் ஆகிய நாடுகள் பெரும் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது.

நேற்றுவரை 39 பேர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 16 பேர் இத்தாலி நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் ஆவார்கள். கேரளா, டெல்லி, ராஜஸ்தான், தெலுங்கானா, ஆக்ரா, காசியாபாத், தமிழ்நாடு ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கேரளாவில் நேற்று முன்தினம் 5 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது. பத்தனம் திட்டாவில் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் இத்தாலி சென்று விட்டு திரும்பினார்கள். அவர்களோடு அவர்களது உறவினர்கள் 2 பேருக்கும் இந்த வைரஸ் தாக்கி இருந்தது. இந்த நிலையில் கொரோனா வைரசுக்கு மேலும் 3 பேர் பாதிக்கப்பட்டு இருப்பது நேற்று உறுதியானது. ஜம்மு, டெல்லி. உத்தரபிரதேசம் ஆகிய இடங்களில் தலா ஒருவருக்கு இந்த வைரஸ் தாக்கி உள்ளது. ஜம்முவைச் சேர்ந்த 63 வயதான பெண் ஒருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீரில் இந்த வைரஸ் தாக்குதலுக்கு உள்ளான முதல் நபர் ஆவார். அவர் சமீபத்தில் ஈரான் சென்று வந்தார். இந்த வைரஸ் உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அவர் அங்குள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவர் நல்ல உடல் நலத்துடன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். அந்த பெண்ணுடன் தொடர்பில் இருந்தவர்களும் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறார்கள்.

இதேபோல் டெல்லியைச் சேர்ந்த ஒருவருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கிறது. டெல்லியில் ஏற்கனவே 2 பேர் பாதிப்புக்குள்ளாகி இருந்தார்கள். தற்போது இது மூன்றாக உயர்ந்துள்ளது. உத்தரபிரதேச மாநிலத்திலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.  நேற்று 3 பேருக்கு பாதிப்பு இருப்பது உறுதியானதால் இந்தியா முழுவதும் இதுவரை கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை சிறப்பு செயலாளர் சஞ்சீவ்குமார் மொத்தம் 42 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார். இதற்கிடையே கேரளாவைச் சேர்ந்த 3 வயது சிறுமிக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரிய வந்துள்ளது. ஆனால் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அதனை உறுதிப்படுத்தவில்லை.

இந்நிலையில் கேரள சிறுமி பாதிக்கப்பட்டு இருப்பதை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் உறுதி செய்ததால் பாதிப்பின் எண்ணிக்கை 43 ஆக உயர்ந்தது. லடாக் மற்றும் மேற்கு வங்காளத்தில் வயதான 2 பேர் பலியாகி உள்ளனர். அவர்கள் வெளிநாடுகளில் இருந்து சமீபத்தில் திரும்பி வந்து இருந்தனர். அவர்கள் கொரோனா தொற்று காரணமாக இறந்தார்களா? என்பது பரிசோதனையின் முடிவில் தெரிய வரும்.

இந்தியாவில் இந்த வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது. கடந்த செவ்வாய்க்கிழமை வரை 6 பேருக்கு தான் கொரோனா வைரஸ் தொற்று இருந்தது. தற்போது 43 ஆக உயர்ந்துள்ளது. இந்த வைரஸ் பரவாமல் தடுக்க மத்திய-மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. விழிப்புணர்வு மூலமும் பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது

Post a Comment

Recent News

Recent Posts Widget