அண்மையில் வழங்கப்பட்ட பட்டதாரி நியமனங்களை பொதுத்தேர்தல் முடிவுறும் வரையில் இரத்து செய்யுமாறு குறிப்பிட்டு சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய அரச நிர்வாகத்துறை செயலாளர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
பட்டதாரி நியமனங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ள சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு இது தொடர்பில் உரிய அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள கடிதத்திலே கூறப்பட்டுள்ளதாவது,
ஜனாதிபதி தேர்தல் காலங்களிலும் இதே போன்ற அரச நியமனங்கள் வழங்கப்பட்டிருந்ததுடன் இவை தேர்தல் இலாபத்தை அடிப்படையாக கொண்டு முறையற்றவகையில் வழங்கப்பட்டுள்ள நியமனங்கள் என்ற அடிப்படையில் இரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் தற்போது பொதுத்தேர்தலுக்கான அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறான சூழ்நிலையிலே வழங்கப்படுகின்ற நியமனங்கள் தேர்தல் இலாப நோக்குடன் வழங்கப்படுவதாகவே கருதப்படுகின்றது. இவ்வாறான நியமனங்கள் அரச சேவையின் தேவை கருதியோ, பற்றாக்குறை காரணமாகவோ வழங்கப்படுவதில்லை. அரசியல் இலாபத்தை கருத்திற்கொண்டே இந்த நியமனங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
அதனால் எதிர்வரும் பொதுத் தேர்தல் முடிவடையும் வரையில் இது போன்ற நியமனங்களை வழங்குவது முறையற்ற செயல் என்பதுடன் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள நியமனங்கள் தேர்தல் முடிவுகள் வெளிவரும் வரையில் இரத்துச் செய்யப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)

Post a Comment