சர்வதேசத்துக்கு ஏற்ற தொழில்வாய்ப்பு சந்தையொன்று இந்நாட்டில் உருவாக்கப்படாமையானது நீண்ட நாள் குறைப்பாடக இருந்து வருகிறது. அதன் காரணமாக 2021-2030 ஆம் ஆண்டு வரையான ஒரு தசாப்தத்தை திறன் மேம்பாட்டு தசாப்தகாலமாக பிரகடனப்படுத்தியுள்ளோம்.
எமது நாட்டில் இரண்டு இளைஞர் புரட்சிகள் நடைபெற்றுள்ளன. இதுபோன்ற நிலை மீண்டும் வராமல் தடுக்க கல்வி சீர்திருத்தம் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையில் அபிவிருத்தியையும் ஏற்படுத்த வேண்டும்.
இளைஞர் சமூகத்திற்கான தொழில் வாய்ப்புச் சந்தையை நவீன கல்வியுடன் பெற்றுக் கொடுப்பதற்காக 10 உயர் தொழில்நுட்ப பல்கலைக்கழகங்களை 10 மாவட்டங்களில் அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. இது வரை பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்படாத 10 மாவட்டங்களில் இந்த தேசிய தொழில்நுட்ப பல்கலைக்கழங்கள் அமைக்கப்படும். நுவரெலியா, களுத்துறை, அம்பாந்தோட்டை, மாத்தளை, புத்தளம், மன்னார், முல்லைத்தீவு, காலி, பொலன்னறுவை மற்றும் கேகாலை ஆகிய 10 மாவட்டங்களிலேயே இந்த பல்கலைக்கழகங்கள் அமைக்கப்படவுள்ளன.
இதன் ஆரம்ப கட்டமாக ஆய்வுகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்காக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது. தற்போது 05 மாவட்டங்களில் இதற்கான ஆய்வுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. இதேபோன்று ஏனைய மாவட்டங்களிலும் ஆய்வு நடவடிக்கைகளை எதிர்வரும் மாதங்களில் பூர்த்திசெய்து துரிதமாக பல்கலைக்கழகங்களை அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Post a Comment