புங்குடுதீவில் அமைக்கப்பட்ட இருபத்தைந்து வீடுகளைக் கொண்ட வீடமைப்புத் திட்டம் நேற்று இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களால் பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டது.மேற்படி வீடமைப்புத் திட்டம் இறுதி நேரத்தில் இலங்கை இராணுவத்தின் முழுமையான சரீர உதவிகள் மூலம் நிறைவு செய்யப்பட்டது.
இந்நிகழ்வில் உரையாற்றும் போது அவர் மேலும் தெரிவித்ததாவது,
தற்பொழுது இலங்கையில் கொரோனா நோய் முற்றாக நீங்கி விடவில்லை.
நான் வடக்கு மக்களுக்கு ஒரு கோரிக்கையை முன்வைக்க விரும்புகின்றேன். நீங்கள் சுகாதார அமைச்சினால் வெளியிடப்படும் சுகாதார நடைமுறைகளை கட்டாயமாக பின்பற்ற வேண்டும். அதிலும் குறிப்பாக நீங்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வீதிகளில் பயணிக்க வேண்டும். அதேபோல் நீங்கள் கைகளை நன்றாக கழுவி உங்களுடைய சுகாதார நடைமுறைகளை பேணுவது அவசியமாகும். ஏனெனில் இலங்கையில் இருந்து இன்னும் கொரோனா முற்றாக நீங்கவில்லை என்றார்.
யுத்தம் முடிந்த பின்னர் வடக்கில் இராணுவத்தினரால் பல்வேறுபட்ட வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக கல்வி, சுகாதாரம், நீர்ப்பாசனம் போன்ற வேலைத்திட்டங்கள் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதேபோல் ராணுவம் மட்டுமல்ல முப்படையினரும் இணைந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கான வேலைத் திட்டங்களை மேற்கொண்டு வருகின்றோம் எனவும் தெரிவித்தார்.
இவ்வீடமைப்புத் திட்ட கையளிப்பு நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர், இலங்கையின் இராணுவத் தளபதி, வடமாகாண பிரதம செயலாளர், வடமாகாண கல்வியமைச்சின் செயலாளர், மாவட்ட அரசாங்க அதிபர், தேசிய வீடமைப்பு அதிகார சபைத் தலைவர், மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர்கள், அதிகாரிகள், மற்றும் வடமாகாண இராணுவ, கடற்படை தளபதிகள் பங்கு கொண்டனர்.
Post a Comment