Ads (728x90)

பல்கலைக்கழகங்கள் வழமையான கல்வி நடவடிக்கைகளுக்காக எதிர்வரும் திங்கள் முதல் ஆரம்பிக்கப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க நேற்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்.

கடந்த ஜூன் மாதம் 15ஆம் திகதி வைத்திய பீடங்களின் இறுதி வருட மாணவர்களின்  பரீட்சை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டதோடு, அதனைத் தொடர்ந்து படிப்படியாக இதுவரை அனைத்து இறுதி வருட மற்றும் மூன்றாம் வருட மாணவர்களின் பரீட்சைகள் நடைபெற்றன எனவும் தெரிவித்தார்.

குறிப்பாக இணையத்தின் மூலம் மாணவர்களுக்கு கல்வி நடவடிக்கைகளை மேற்கொண்டமை மிகவும் வெற்றிகரமாக அமைந்ததாக தெரிவித்த அவர்,  சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள ஆலோசனைகள் மற்றும் வழங்கப்பட்டுள்ள வழிகாட்டல்களின் அடிப்படையில் இதுவரை மாணவர்களுக்கான விடுதியில் ஒரு அறையில் ஒருவர் மாத்திரம் தங்க வைக்கப்பட்டிருந்ததாகவும், பரீட்சைகள் நடைபெற்ற காலப்பகுதியில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

தற்போது சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தலுக்கு அமைய எந்தவொரு தடையுமின்றி மாணவர்கள் வழமைபோன்று விடுதியில் தங்கலாம் எனவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன் குறித்த விடுதியின் அறையில் தங்கும் மாணவர்கள் குறிப்பிட்ட இடத்தைச் சேர்ந்த குறிப்பிட்ட வருடத்தைச் சேர்ந்த மாணவர் குழுவாக இருக்க வேண்டுமெனவும், மற்றைய ஆண்டு மாணவர்களை கலப்பாக இருக்க அனுமதிக்க வேண்டாமென பல்கலைக்கழகங்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாகவும் அவர் இதன்போது தெரிவித்தார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget