முதற் கட்டமாக பயணிகளுக்கு சிறந்த மன நிலையுடன் பஸ் வண்டியில் அல்லது புகையிரதத்தில் பயணம் செய்வதற்கான சூழலை ஏற்படுத்தி போக்குவரத்து சேவையை மேம்படுத்தும் பணியை ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிகாரிகளை பணித்துள்ளார்.
ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே அவர் இதனைத் தெரிவித்தார். சிறியதோர் ஆரம்பத்திலிருந்து பெரிய மாற்றத்தினை செய்ய முடியும். பஸ் வண்டிகளை கழுவி சுத்தம் செய்து பிரயாணிகளுக்கு பயணிப்பதற்கான ஒழுங்குகளை நாளைய தினமே ஆரம்பியுங்கள் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
சுவரொட்டிகளை ஒட்டுவதை நிறுத்துவதற்கு மேற்கொண்ட சிறியதொரு தீர்மானம் நாட்டின் அனைத்து நகரங்களையும் சுத்தமாக வைத்திருப்பதற்கு வழிவகுத்திருப்பதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அனைத்து துறைகளினதும் அபிவிருத்தியை மிகச் சிறிய இடத்திலிருந்து ஆரம்பிக்க முடியுமென குறிப்பிட்டார்.
கிராமிய பிரதேசங்களில் பஸ் போக்குவரத்து தொடர்பாக அரச மற்றும் தனியார் துறைகள் கவனம் செலுத்த வேண்டுமென்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
புகையிரதங்கள் மற்றும் பஸ் வண்டிகள் இணைந்த சேவையையும், பயண நேரசூசியையும் உடனடியாக ஆரம்பியுங்கள். போக்குவரத்து துறையை மேம்படுத்துவதற்காக முதலில் தீர்வுகளை வழங்கக்கூடிய துறைகளை இனங்காண்பது அவசியமாகும். எதிர்வரும் ஐந்து வருடங்களில் போக்குவரத்து சேவையை மேம்படுத்துவதற்கு குறுகிய கால மற்றும் நீண்டகாலத்திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும். குறித்த இலக்கு அடையப் பெறுகின்றதா என்பது குறித்து ஆராய்வது மிகவும் முக்கியமானதாகும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
Subscribe to:
Post Comments (Atom)

Post a Comment