Ads (728x90)

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு புதியத் தலைமைத்துவமொன்று அவசியம் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார். இதற்கான முழுமையான ஒத்துழைப்பை வழங்க தான் தயாராக உள்ளதாகவும் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இந்த நாட்டின் பெரிய ஜனநாயகக் கட்சிகள் இரண்டும் இன்று அழிவடைந்துள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எங்கு என்று இன்னமும் நான் தேடிக்கொண்டிருக்கிறேன். அதேபோன்று ஐக்கிய தேசியக் கட்சியும் இன்று துண்டு துண்டுகளாக சிதைவடைந்துள்ளது. 70 வருடங்களுக்கு மேல் வரலாறு கொண்ட இந்த கட்சிகள் இரண்டும் காணாமல் போயுள்ளன.

ஜே.ஆர்.ஜெயவர்த்தனவினால் உருவாக்கப்பட்ட குழப்பகரமான அரசியல் அமைப்பினால் அறிமுகப்படுத்தப்பட்ட தேர்தல் முறைமையினால் இன்று தனி ஒரு கட்சிக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைத்துள்ளது. இதனை பாரிய வெற்றியாக அந்தத் தரப்பினர் கொண்டாடி வருகிறார்கள்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ ஜனாதிபதித் தேர்தலில் பெற்றுக் கொண்ட வாக்குகளை விட இரண்டு இலட்சம் வாக்குகள் இந்தத் தேர்தலில் அந்தத் தரப்புக்கு குறைவடைந்துள்ளது. மூன்றில் இரண்டு பெரும்பான்மையானது இத்தேர்தல் முறைமையினால் தான் அவர்களுக்கு கிடைத்தது. அத்தோடு எதிர்க் கட்சி இன்று முழுமையாக பலமிழந்துள்ளது.


ராஜபக்க்ஷவின் அரசியல் கொள்கைகளை நாம் என்றும் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் அவர் சக்திமிக்கதொரு தலைவர் என்பதை ஏற்றுக் கொண்டே ஆகவேண்டும். அவருக்கு ஏற்ற வகையிலான பலமான ஒரு எதிர்க் கட்சித் தலைவர் ஒருவர் இன்று நாட்டில் இல்லை என்பதுதான் உண்மையாகும்.

சுதந்திரக் கட்சிக்கு இன்று ஏற்பட்டுள்ள நிலைமையை நினைத்து நான் மிகவும் வருந்துகிறேன். நாம் அன்று கூட்டணிகளை அமைத்தோம். அன்று ஒரு கொள்கைக்கு அனைவரும் இணங்கினோம். ஆனால் இன்று எமது கொள்கைக்கு முற்றிலும் முரணாக பொதுஜன பெரமுனவுடன் கூட்டணி வைத்துள்ளோம்.

சுதந்திரக் கட்சியினருக்கு அமைச்சுப் பதவிகள் கூட வழங்கப்படவில்லை. சுதந்திரக் கட்சி ஆதரவாளர்கள் இன்றும் இலங்கையில் இருந்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். தற்போது இந்தக் கட்சியை மறுசீரமைக்கும் காலம் வந்துள்ளது. இதற்கான வேலைத்திட்டம் ஒன்றை ஸ்தாபிக்க வேண்டும்.

புதியத் தலைமைத்துவமொன்று சுதந்திரக் கட்சிக்கு அவசியமாகிறது. இதற்கான முழுமையான ஒத்துழைப்பினை வழங்க நான் என்றும் தயாராகவே இருக்கிறேன் என அவர் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget