கொரோனா பாதுகாப்பு நடவடிக்கை காரணமாக மன்னார் மாவட்டத்தில் இதுவரை 922 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர்களில் மன்னார் பட்டித்தோட்டத்தை சேர்ந்த 130 குடும்பங்களை சேர்ந்த 443 பேர்களும், பெரியகடை பகுதியை சேர்ந்த 166 குடும்பங்களை சேர்ந்த 479 பேர்களும் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ்.குணபாலன் தெரிவித்தார்.
மன்னார் மாவட்டச் செயலகத்தில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.
கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நபருடன் நேரடியாக தொடர்பு பட்டவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புகளை பேணியவர்களை தவிர்ந்த குறித்த கிராமங்களை சேர்ந்த ஏனையவர்களை விடுவிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நாங்கள் ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்ட பீ.சி.ஆர். பரிசோதனையின் மூன்றாவது நிலை முடிவுகள் கிடைக்கப் பெற்றுள்ளது.
இந்த முடிவுகளின்படி மேலும் மூவறுக்கு கொரோன தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து நாங்கள் 24 மணி நேர முடக்க நிலையை இரண்டு கிராமங்களுக்கு ஏற்படுத்தியிருந்தோம்.
இது தொடர்பாக இன்றைய தினம் மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரிடன் கலந்துரையாடிய போது இன்று திங்கட்கிழமை மாலையுடன் முடக்க நிலையிலிருந்து விடுவிக்க முடியும் என தெரிவித்துள்ளார்.
மேலும் அரச அலுவலகங்கள் அனைத்தும் இயல்பான நிலையில் தங்கள் பணிகளை மேற்கொள்ளும் . உரிய சுகாதார நடை முறைகளை பின்பற்றி அனைத்து அரச ஊழியர்களும் அலுவலகங்களுக்கு சமூகமளிக்க வேண்டும்.
அத்துடன் உயர் தர பரீட்சைகளை பொறுத்த வரையில் பரீட்சைகளுக்கான சகல நடவடிக்கைகளும் பிராந்திய சுகாதார பணிப்பாளரின் ஆலோசனைக்கு அமைவாக மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் ஒரு சில இடங்களில் மூன்றாம் நிலை தொற்றுக்குள்ளாகிய மாணவர்கள் விசேட அறைகளில் பரீட்சை எழுத அனுமதிக்கப்பட்டுள்ளனர். எனவே மன்னார் மாவட்டத்தை பொருத்த வரையில் பரீட்சைகள் மிகவும் சுமூகமான முறையில் இடம் பெற்று வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Post a Comment