Ads (728x90)


யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மாவட்டங்களில் 08 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. யாழ். போதனா வைத்தியசாலையில் நேற்று 340 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் வடக்கில் 08 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என வடமாகாண சுகாதார சேவை திணைக்கள பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆர்.கேதீஸ்வரன் தொிவித்துள்ளார். 

வேலணை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவைச் சேர்ந்த மூவர் நேற்று தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர். ஊர்காவற்றுறை பகுதியை சேர்ந்த அவர்கள் கொழும்பில் தனியார் உணவகத்தில் தொழில் புரிந்தவர்கள். தற்போது வீட்டுக்கு வந்துள்ளனர். அவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் சோதனையில் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

யாழ். மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் நல்லூர் பகுதியில் ஒருவர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டார். இவர் கொழும்பில் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுபவர். தற்போது யாழ்ப்பாணத்துக்கு வந்துள்ளார்.

உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவைச் சேர்ந்த இருவர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர். பேலியகொடை மீன் சந்தைக்கு சென்று வந்த, தொற்று உறுதியானவரின் மனைவியும், மகளுமே நேற்று தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

முல்லைத்தீவு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு சேர்ந்த இருவர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர். அவர்கள் பேலியகொட மீன் சந்தைக்கு சென்று வந்தவர்கள்.

இதேவேளை ஏற்கனவே கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட தென்பகுதியை சேர்ந்தவர்கள் தற்போது மருதங்கேணி வைத்தியசாலையில் சிகிச்சை பெறுகின்றனர். அவர்களில் 07 பேருக்கு செய்யப்பட்ட பரிசோதனையில் 03 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

யாழ்.பருத்துறை மற்றும் கரவெட்டி பகுதிகளில் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட 03 பேர் பொலனறுவை கொரோனா சிறப்பு வைத்தியசாலைக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பருத்தித்துறை மற்றும் பொலிகண்டி பகுதிகளைச் சேர்ந்த 03 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இந்நிலையில் இவ்வாறு தொற்று உறுதியான மூவரையும் பொலன்னறுவை கொரோனா சிறப்பு வைத்தியசாலைக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக மாகாண சுகாதார சேவை திணைக்கள பணிப்பாளர் மேலும் தொிவித்துள்ளார். 

Post a Comment

Recent News

Recent Posts Widget