20 வது அரசியலமைப்பு திருத்தத்தை முன்னோக்கி கொண்டு செல்லாது புதிய அரசியலமைப்பை தயாரிப்பதற்கு முன்னுரிமை அளிக்குமாறு கத்தோலிக்க ஆயர்கள் பேரவை கோரிக்கை விடுத்துள்ளது.
அனைத்து சந்தர்ப்பங்களிலும் மக்களின் இறைமை பாதுகாக்கப்பட வேண்டும். எனவே 20 வது திருத்தத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க முன்னர் அதனை விரிவாக ஆராய வேண்டும் என பேரவை விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அனைத்து அதிகாரங்களும் தனி ஒருவர் வசமாவது ஜனநாயக நாட்டிற்கு பாதகமான விடயமாக அமையும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.
பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை மக்களின் உண்மையான ஜனநாயக நிலைப்பாட்டை காண்பிப்பதில்லை எனவும் கத்தோலிக்க ஆயர்கள் பேரவை தெரிவித்துள்ளது.
19 வது திருத்தத்திலுள்ள முக்கிய நிறுவனங்களின் சுயாதீனத்தன்மை மற்றும் பொறுப்புடன் கூடிய அரச நிர்வாகத்தை உறுதிப்படுத்தும் விடயங்களை பாதுகாக்குமாறு இலங்கை தேசிய கிறிஸ்தவ மன்றம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
20 வது திருத்தம் தொடர்பில் பாராளுமன்றத்தில் விவாதிப்பதற்கு முன்னர் மக்களின் கருத்துக்களைக் கேட்டறிவதற்கு ஏதுவாக அனைத்துத் திருத்தங்களையும் மக்களுக்கு பகிரங்கப்படுத்துமாறு கிறிஸ்தவ சபை விடுத்துள்ள அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இலங்கை மெதடிஸ்த சபை, இலங்கைத் திருச்சபை, தென்னிந்தியத் திருச்சபை, இலங்கை பெப்டிஸ்ட் திருச்சபை, இலங்கை கிறிஸ்தவ சீர்திருத்த திருச்சபை, இரட்சணிய சேனை சபை உள்ளிட்ட பல அமைப்புகள் இந்த அறிக்கையில் கையொப்பமிட்டுள்ளன.

Post a Comment