தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத்தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் மீண்டும் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழு நேற்று கூடியபோது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவராகவும், பாராளுமன்ற குழுத்தலைவராகவும் இரா.சம்பந்தன் தொடர்ந்தும் செயற்படுவதற்கு உறுப்பினர்கள் ஏகமனதாக சம்மதம் தெரிவித்துள்ளனர்.
எனினும் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் மற்றும் கொறடா பதவிகள் தொடர்பில் பங்காளிக் கட்சிகளுக்கு இடையே கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளது.
கூட்டமைப்பின் புதிய பேச்சாளர் பதவிக்கு பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரனை பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் முன்மொழிய அதனை பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் வழிமொழிந்துள்ளார்.
இந்தப் பதவி பங்காளிக் கட்சியான தமிழீழ விடுதலை இயக்கத்திற்கு கிடைக்க வேண்டும் என இதன்போது சில உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனுக்கு அந்தப் பதவியை வழங்குவதில் தமக்கும் ஆட்சேபனை இல்லை என இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
தேர்தல் காலங்களில் தமிழரசுக் கட்சி வேட்பாளர்களை செல்வம் அடைக்கலநாதன் பகிரங்கமாக விமர்சித்ததால் அவரை அந்த பதவியில் அமர்த்த முடியாதென சில தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் இதன்போது எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தனுக்கு அந்தப் பதவியை வழங்குமாறு பங்காளிக் கட்சிகள் முன்வைத்த கோரிக்கையையும் அவர்கள் நிராகரித்தனர்.
இந்நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் மற்றும் கொறடா பதவிகளுக்கான உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படாமலேயே நேற்றைய கூட்டம் முடிவிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
பாராளுமன்றக் குழுவை மீண்டும் கூட்டி இந்த விடயம் தொடர்பில் தீர்மானங்களை மேற்கொள்வதற்கும் இதன்போது இணக்கம் காணப்பட்டுள்ளது.

Post a Comment