நாட்டில் நிலவும் கோவிட் -19 நிலமை காரணமாக, நாளை புதன்கிழமை முதல் மூன்று எச்சரிக்கை நிலைகளின் கீழ் பேருந்துக் கட்டணங்களை திருத்த அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
சுகாதார அதிகாரிகள் பிறப்பித்த உத்தரவுகளின் அடிப்படையில் தற்போது எச்சரிக்கை நிலை 1 செயல்படுத்தப்படவில்லை என்றும், எச்சரிக்கை நிலை 2 இன் கீழ் இருக்கைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மட்டுமே பயணிகளை அனுமதிக்க வேண்டும் என்றும் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார். கோவிட் – 19 எச்சரிக்கை நிலை 2 இன் கீழ் பேருந்துகள் இயக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.
அதன்படி சாதாரண பேருந்துகளுக்கு இருக்கைகளின் எண்ணிக்கைக்கு அமைய பயணிகளை அனுமதிக்கப்படுவதால் தற்போதுள்ள கட்டணத்தின் அடிப்படையில் 20 சதவீதம் அதிகரிக்கும் என்றும், தற்போது 12 ரூபாயாக இருக்கும் குறைந்தபட்ச கட்டணம் 14 ரூபாயாக உயர்த்தப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார். எனினும் சொகுசு மற்றும் அரை சொகுசு பேருந்துகளுக்கான கட்டணங்கள் இந்த முறையின் கீழ் மாறாது என்றும் தெரிவித்தார்.
அதிக ஆபத்துள்ள பகுதிகளில் பேருந்துகளில் சமூக இடைவெளியை அனுமதிக்கும் வகையில் எச்சரிக்கை நிலை 3 இன் கீழ் இருக்கைகளின் எண்ணிக்கையில் 50 சதவீத பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் குறிப்பிட்டார்.
அதன்படி சாதாரண பேருந்துகளுக்கு 50 சதவீதமும் அரை சொகுசு மற்றும் சொகுசு பேருந்துகளுக்கு 20 சதவீதமும் மற்றும் சுப்பர் சொகுசு பேருந்துகளுக்கு 10 சதவீதமும் கட்டணங்கள் அதிகரிக்கப்படும் என்று அவர் கூறினார்.
கோவிட் -19 போக்குவரத்துக் கொள்கை இன்று அறிமுகப்படுத்தப்பட்டது. அதனால் திருத்தப்பட்ட கட்டணங்களின் கீழ் நாளை முதல் பேருந்துகள் சேவையில் ஈடுபடும் என்று போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இந்த கொள்கை தொடர்பாக கொழும்பில் நடந்த நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம, “பேருந்துகளில் தனிப்பட்ட விவரங்களை எழுத வேண்டியிருப்பது குறித்து பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. அதற்குத் தீர்வாக பயணிகள் அதிதிறன் அலைபேசி (smartphone) மூலம் ஸ்கேன் செய்து விவரங்களை பதிவு செய்ய கியூஆர் குறியீடு (QR code) இருக்கையின் பின்புறத்தில் இணைக்கப்படும்.
பயணியிடம் அதிதிறன் அலைபேசி இல்லையென்றால், சாதாரண அலைபேசி மூலம் பயணிகளாக பதிவு செய்ய கியூஆர் குறியீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணுக்கு குறுந்தகவல் அனுப்பலாம். பயணிக்கு ஒருவரிடம் அலைபேசியே இல்லை என்றால், அவர்கள் பேருந்தில் கிடைக்கும் ஒரு படிவத்தைப் பெற்று, விவரங்களை தங்கள் பேனாவால் நிரப்பலாம். நிறைவு செய்யப்பட்ட படிவத்தை தக்கவைத்துக் கொள்ளலாம்.
அனைத்து முக்கிய பேருந்து தரிப்பிடங்களும் ஒரு நாளைக்கு ஒரு முறையாவது கிருமி நீக்கம் செய்யப்படும். பேருந்து தரிப்பிடங்களில் காத்திருக்கும் பயணிகளுக்கு இடையே ஒரு மீற்றர் தூரம் பராமரிக்கப்படவேண்டும்.
சொகுசு பேருந்துகளில் நுழைவதற்கு முன்பு பயணிகள் மீது வெப்பநிலை சோதனைகள் மற்றும் பேருந்து தரிப்பிடங்களில் எழுமாறான முறையில் வெப்பநிலை சோதனைகள் நடத்தப்படவேண்டுமெனவும் என்றும் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.

Post a Comment