கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை பிரதேசத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
கொழும்பில் உள்ள மயூரா உணவகத்தில் பணியாற்றிய குறித்த நபர் கொழும்பிலிருந்து கடந்த 28ஆம் திகதி கொழும்பு - வவுனியா பேருந்தில் பயணித்து காலை 10 மணிக்கு வவுனியா வந்தடைந்துள்ளார்.
பின்னர் அங்கிருந்து மாலை 04 மணிக்கு யாழ்ப்பாணம் - வவுனியா பேருந்தில் கிளிநொச்சி - பரந்தன் வரை பயணித்த குறித்த நபர் பரந்தன் சந்தியில் பழங்களை வாங்கிக் கொண்டு, மாலை 6.15 மணிக்கு முல்லைத்தீவு நோக்கி பயணித்த தனியார் பேருந்தில் தர்மபுரம் சென்றுள்ளார்.
இந்நிலையில் குறித்த நபர் பயணித்த இடங்கள், நேரம் என்பவற்றின் அடிப்படையில் சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளது.
குறித்த நபர் வருகை தந்தவுடன் அவர் உடனடியாக சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
கண்டாவளை பிரதேச வைத்திய அதிகாரியும், பொதுச் சுகாதார பரிசோதகரும் விழிப்பாக செயற்பட்டமையால் உடனடியாக குறித்த நபர் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டார்.
அவர் பணியாற்றிய உணவக உரிமையாளர் மற்றும் அங்கு பணியாற்றிய சில பணியாளர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து இவருக்கும் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் போதே இவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தொற்றாளர்கள் இனம் காணப்பட்ட நிலையில் கிளிநொச்சி மாவட்டம் மாத்திரமே கொரோனா தொற்றாளர்கள் இன்றிய மாவட்டமாக இருந்த நிலையில் நேற்று முதலாவது கொரோனா தொற்றாளர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

Post a Comment