Ads (728x90)

வேலணை பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட மண்டைதீவு பகுதியில் இன்று கடற்படையின் தேவைக்கு சுவீகரிப்பதற்காக பொதுமக்களின் காணியை அளவீடு செய்வதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சி மக்களின் போராட்டத்தை தொடர்ந்து கைவிடப்பட்டுள்ளது.

காணி அளவிடப்படவுள்ளதாக தகவல் கிடைத்த நிலையில் மக்களும், அரசியல் பிரமுகர்களும் இன்று காலை 8.30 மணிக்கு மண்டைதீவில் திரண்டு வீதி மறியல் போராட்டத்தை முன்னெடுத்து தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தினர்.

சம்பவத்தினை அடுத்து வேலணை பிரதேச செயலர் சோதிநாதன் அங்கு சென்று மக்களை சமாதானப்படுத்த முயன்ற போதிலும் மக்கள் அதற்கு உடன்படவில்லை.

இந்நிலையில் குறித்த நடவடிக்கையினை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக அறிவித்த பிரதேச செயலர், காணி அமைச்சின் செயலாளருடன் இது தொடர்பில் கலந்துரையாடி அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தீர்மானிப்பதாகத் தெரிவித்தார்.

போராட்டத்தில் மக்களுடன் நாடாளுமன்ற உறுப்பினர்களான செ.கஜேந்திரன், சி.சிறிதரன், பா.கஜதீபன், மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன், வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், பிரதேச சபை உறுப்பினர் நாவலன் உட்படப் பலர் பங்கேற்றனர்.


Post a Comment

Recent News

Recent Posts Widget