Ads (728x90)

இலங்கைக்கான சுவிற்சர்லாந்து தூதுவர் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று நேற்று மாலை யாழ். தனியார் விடுதியில் இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலின் போது, ஜெனிவாவில் கொண்டுவரப்பட இருக்கின்ற தமிழர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலை தொடர்பில் உலக நாடுகளின் நிலைப்பாடுகள் தொடர்பில் மிகமுக்கியமாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

அத்துடன் 30/1, 34/1, 40/1 தீர்மானங்களுக்கு மேலதிகமாக இப்பொழுது வரப்போகின்ற தீர்மானம் இலங்கைக்கு என்ன படிப்பினையினை கொடுக்கும் அல்லது எவ்வாறு இலங்கைக்கு அழுத்தத்தை கொடுக்கும் என்பது தொடர்பாகவும் ஆராயப்பட்டது.

மேலும் தொல்பொருள் திணைக்களம் மற்றும் வனவள திணைக்களத்தின் ஊடான நில ஆக்கிரமிப்புக்கள் மற்றும் மத்திய அமைச்சின் கீழ் இருக்கின்ற நிறுவனங்களை வைத்து மக்களின் நிலங்களை மட்டுமல்லாது அவர்களின் இருப்புக்களையும் இலங்கை அரசாங்கம் கேள்விக்குறியாக்குவது தொடர்பாகவும், இதுவரை தமது சொந்த இடங்களுக்கு செல்லாத மக்களது விடயங்கள் தொடர்பாகவும், அரசியல் கைதிகள் தொடர்ச்சியாக சிறையில் இருக்கின்ற நிலமைகள் தொடர்பிலும் ஆராயப்பட்டது.

மேலும் சுவிற்சர்லாந்தில் தஞ்சம் புகுந்துள்ள எமது தமிழ் மக்களை உடனே திருப்பி அனுப்ப வேண்டாம்  என்பதற்கான எழுத்து மூல கடிதத்தினை நாங்கள் சுவீஸ் தூதுவரிடம் கையளித்து இருந்தோம் அதனை அவர் ஏற்றுக்கொண்டார்.

அத்துடன் தமிழ் மக்களை திருப்பி அனுப்புவதற்கான நடவடிக்கைகளை கடந்த ஒன்றரை வருடங்களாக நாங்கள் கையாளவில்லை என்றும் தற்போதும் அவ்வாறான எண்ணம் தமக்கு இல்லை என்றும் குறிப்பிட்டார் எனவும் தெரிவித்துள்ளனர்.

இக்கலந்துரையாடலில் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும்  சார்ல்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.


Post a Comment

Recent News

Recent Posts Widget