Ads (728x90)

வடக்கு-கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு சர்வதேசத்திடம் நீதி கேட்டு உறவுகள் நேற்று கிளிநொச்சியில் தீச்சட்டி போராட்டத்தை முன்னெடுத்தனர்.

வடக்கு-கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கிளிநொச்சி மாவட்டத்தில் தொடர் கவனயீர்ப்புப் போராட்டத்தை ஆரம்பித்து நேற்றுடன் 04 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்த தீச்சட்டி பேரணியானது கிளிநொச்சி பிள்ளையார் ஆலய முன்றலில் ஆரம்பமாகி ஏ9 வீதி வழியாக கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் நோக்கி நகர்ந்து கந்தசுவாமி ஆலய முன்றலில் போராட்டம் நிறைவடைந்தது.

இப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் எங்கே எங்கே உறவுகள் எங்கே, சர்வதேசமே பதில் சொல், வேண்டும் வேண்டும் உறவுகள் வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோசங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

சர்வதேசத்தின் ஊடாக நீதியை பெற்றுக்கொள்வதற்காக இந்தத் தொடர் போராட்டத்தை ஆரம்பித்திருந்தோம். எங்களுடைய உறவுகள் எமக்கு கிடைக்கும் வரையும், அவர்களிற்கான நீதி கிடைக்கும் வரையிலும் குறித்த போராட்டத்தை கைவிடப்போவதில்லை என்று காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் வலியுறுத்தினர்.

வடக்கு-கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட்டுக்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ‘வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு விரைவான நீதி’ என்ற தலைப்பிடப்பட்டு நேற்று இந்தக் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தின் பிரதியை அவர்கள் ஊடகங்களுக்கு வழங்கியிருந்தனர்.


Post a Comment

Recent News

Recent Posts Widget