மகா சிவராத்திரி விரதம் தொடங்கிய நாள் முதல் காலையிலிருந்து இரவு முழுவதும் கண்விழித்திருந்து சிவபெருமானை நினைத்து, அவரின் திருநாமங்களையும், அவரது பஞ்சாட்ஷர மந்திரங்களையும் உச்சரித்துக் கொண்டும், அருகிலுள்ள சிவாலயத்திற்கு சென்று அங்கு நான்கு ஜாம பூஜைகளிலும் கலந்து கொண்டு சிவபெருமானுக்கு நடைபெறும் அபிஷேக ஆராதனைகளை கண்குளிர தரிசித்து வணங்க வேண்டும்.
மகா சிவாராத்திரிக்கு மறுநாள் அதிகாலையில் குளிர்ந்த நீரில் குளித்து கோவிலில் சிவபெருமானுக்கு நடைபெறும் தீபாராதனையை கண்டு தரிசித்த பின்னரே விரதத்தை முடிக்க வேண்டும். அப்போது தான் சிவராத்திரி விரதம் இருப்பதன் முழு பலனும் நமக்கு கிடைக்கும்.
சிவராத்திரி வழிபாட்டின் மூலம் உங்களுக்குத் தற்போது இருக்கும் கவலைகளும், வர இருக்கும் கவலைகளும் வலுவிழந்து நீங்கும். நீங்கள் முன்னெடுத்த காரியங்கள் வெற்றி பெறும்.
சிவாயநம என்று சிந்தித்திருந்தால், வேறு அபாயம் நம்மை ஒரு போதும் நெருங்காது. எண்ணும் இடங்கள் எல்லாம் செல்லத்துடிக்கும் மனமானது மிகவும் இலகுவாக நம் கட்டுக்குள் வரும். இதனால் துன்பம் தரும் செயல்களில் வீழ்ந்திடாது, நன்மை தரும் செயல்களில் மட்டுமே நிலைத்திருந்து நமக்கு நன்மையே வந்து சேரும்.
இப்பிறவியில் நமக்கு வரும் துன்பங்களை வலுவிழக்கச் செய்து, நமக்கு நன்மையே அருளி நம் தீவினைகளையும் சுட்டெரித்து நமக்கு முக்தியும் தந்தருள்வார் சிவபெருமான்.

Post a Comment