யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா, பதுளை, நுவரெலியா, மாத்தளை, கம்பஹா, கொழும்பு, இரத்தினபுரி, களுத்துறை, புத்தளம், அநுராதபுரம், காலி, கேகாலை, மற்றும் குருணாகல், ஆகிய 17 மாவட்டங்களிலும் 126 பிரதேச செயலகப் பிரிவுகள் காலநிலையால் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளன.
நாட்டில் அனர்த்தம் ஏற்படக் கூடும் என அடையாளம் காணப்பட்ட பகுதிகளிருந்து முன்னெச்சரிக்கையாக 1,020 குடும்பங்களைச் சேர்ந்த 3,537 பேர் இடமாற்றப்பட்டு உறவினர்களின் வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
சீரற்ற காலநிலை காரணமாக நாடளாவிய ரீதியில் 17,481 குடும்பங்களைச் சேர்ந்த 62,247 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 18 வீடுகள் முழுமையாகவும் , 960 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
நாரம்மல், பொல்கஹவெல, அலவ்வ, பன்னல, பிங்கிரிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் வெள்ளப்பெருக்கு உயர்வடைந்துள்ளதால் நீர்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
மண்சரிவு அபாயம் நிலவும் பகுதிகளிலிருந்து வெளியேறாதவர்கள், பொலிஸ் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகள் ஊடாக அதிகாரத்தை பயன்படுத்தி வெளியேற்றப்படுவார்கள் எனவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம், முப்படைகள் மற்றும் பொலிஸார் எத்தகைய இயற்கை அனர்த்தங்களை எதிர்கொள்வதற்கும் தயாராக உள்ளதாகவும், அதற்கான உபகரணங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.
அனர்த்த முகாமைத்துவ மாவட்டக் காரியாலயங்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் ஆகியோருடன் இணைந்து அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் கூறினார்.
தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் குறைந்த அழுத்தப் பிரதேசம் தற்போதும் நிலை கொண்டுள்ளது. இது அடுத்த 36 மணித்தியாலங்களில் ஒரு தாழமுக்கமாக விருத்தியடையக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன்
மேற்கு - வடமேற்கு திசையில் இலங்கையின் வடக்கு கரையை அண்மித்ததாக வட தமிழ்நாட்டை நோக்கி நகரக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இதன் காரணமாக நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் மேல் மாகாணங்களில் சில இடங்களில் 150 மில்லி மீற்றருக்கும் அதிகமான மிகப் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது என வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment