Ads (728x90)

கொரோனாத் தொற்றுக் காரணமாக பாடசாலை மாணவர்கள் இழந்த கல்வியை மீள வழங்குதற்காக புதிய வேலைத் திட்டம்  முன்னெடுக்கப்பட உள்ளது என தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் சுனில் ஜயந்த நவரத்ன தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றுப்பரவல் காரணமாக மாணவர்கள் இழந்த கற்றல் நடவடிக்கைகள் தொடர்பில் தேசிய கல்வி நிறுவகத்தால் மதிப்பீடு ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது.

2020 ஆம் ஆண்டு கல்வி இழப்பானது மேல் மாகாணத்தில் 55 சதவீதமாகவும், ஏனைய மாகாணங்களில் 45 சதவீதமாகவும் பதிவாகியுள்ளது. நடப்பாண்டில் தற்போதுவரை மேல் மாகாணத்தில் 90 சதவீதமாகவும், ஏனைய மாகாணங்களில் 70 சதவீதமாகவும் காணப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இதனால் 2020 மற்றும் 2021ஆம் ஆண்டுகளில் மாணவர்கள் இழந்த கல்வியை வழங்குவதற்கு நவம்பர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை காலம் ஒதுக்கப்பட்டுள்ளது. அது எதிர்வரும் ஏப்ரல் மாதம் வரை நீடிக்கப்படலாம் எனவும் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.

தரம் 03 மற்றும் 04 ஆம் தர மாணவர்களுக்கு 2022 ஆம் ஆண்டு மே மாதம் முதல் டிசெம்பர் மாதம் வரை இந்தக்கல்வியை வழங்க முன்மொழியப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

இந்தத் திட்டத்தை நிர்வகிக்கும் முறை தொடர்பான சுதந்திரம் பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்றும், இந்தத் திட்டத்துக்கு அமைய அத்தியாவசியப் பகுதிகள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget