Ads (728x90)

நீதிமன்ற உத்தரவுக்கமைய அரச தாதியர்கள் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வந்த பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அச்சங்கத்தின் தலைவர் சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார்.

தற்போது 3,000 ரூபாவாக உள்ள விசேட கடமைக் கொடுப்பனவை 10,000 ரூபாவாக உயர்த்துதல், ஆசிரியர் சேவை சம்பள உயர்வின் மூலம் தாதிய சேவைக்கு ஏற்பட்டுள்ள சம்பள முரண்பாட்டைத் தீர்த்தல், தொழில் வல்லுனர் பட்டதாரிகளுக்கு திருத்தியமைத்த சம்பள அளவுத்திட்டத்தை நிர்ணயித்தல், தகுந்த பதவி வாய்ப்புகளைக் கிடைக்கச் செய்தல்,  இடர்கால கொடுப்பனவு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் 18 சுகாதார தொழிற்சங்கத்தைச் சேர்ந்தவர்களால் கடந்த திங்கட்கிழமை 07 ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்பட்டு வந்தது.

தாதியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு நடவடிக்கை காரணமாக வைத்தியசாலைகளில் ஏற்பட்டுள்ள அசௌகரிய நிலை தொடர்பில் சட்ட மா அதிபர் திணைக்களம் நீதிமன்றத்திற்கு எடுத்துக் கூறியதைத் தொடர்ந்து நீதிமன்றால் தடையுத்தரவு வழங்கப்பட்டது.

இந்நிலையில் குறித்த நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து அவர்கள் தங்களது பணிப்பகிஷ்கரிப்பை கைவிட்டுள்ளனர்.

இதேவேளை நேற்று மின்சார விநியோகம் மற்றும் வைத்தியசாலை சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்டு ஜனாதிபதியினால் அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


Post a Comment

Recent News

Recent Posts Widget