Ads (728x90)

மன்னார் மாவட்டத்தில் சைவசமயத்தை தொடர்ந்து இழிவுபடுத்தும் செயல் முற்றுப்பெறுவதற்கு உடனடி நடவடிக்கை எடுக்குமாறு அகில இலங்கை இந்து மாமன்றத்தின் உப தலைவர் கலாநிதி ஆறு. திருமுருகன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை கோரியுள்ளார்.

சரித்திர பிரசித்தி பெற்ற தீருக்கேதீச்சர ஆலய கிழக்குத்தெரு வீதியில் அவசரமாக கிருஸ்தவ வழிபாட்டுச் சின்னம் நிறுவப்பட்டுள்ளமை சைவ மக்களை அதிர்ச்சிக்கு உட்படுத்தியுள்ளது.

ஏற்கனவே எவ்வித அனுமதியுமின்றி கிழக்குத்தெருவில் கத்தோலிக்க ஆலயம் கட்டப்பட்டது தொடர்பாக நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு வழக்கு நடைபெற்று வருகிறது.

கிழக்குத்தெரு வீதியில் திருக்கேதீச்சர பெருவிழாக் குறித்த வரவேற்பு வாயில் அமைக்கப்பட்ட போது, அதனை கத்தோலிக்கத் துறவி உட்பட சிலர் கூடி உடைத்து நிறுத்தியமை அனைவரும் அறிந்ததே.

பல ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த திருக்கேதீச்சர சுற்றாடலை திட்டமிட்டு அசிங்கப்படுத்தும் முயற்சி கடந்த சில வருடங்களாகத் தொடருகிறது. இவ்விடயம் தொடர்பாக உடனடி நடவடிக்கை எடுத்து திருக்கேதீச்சர சிறப்பை காக்குமாறு வேண்டுகின்றோம்.

சுதேசிய மதமாகிய சைவசமயத்தை மன்னார் மாவட்டத்தில் தொடர்ந்து இழிவுபடுத்தும் செயல் முற்றுப்பெறுவதற்கு வழி செய்யவேண்டும்.

சைவ மக்கள் என்றும் மத விவகாரத்தில் பகையை வளர்க்க விரும்புவதில்லை. எனினும் திட்டமிட்டுச் செயற்படும் இத்தகைய செயற்பாடுகள் சமய மோதல்களை உருவாக்கும்.

போர்ச்சூழலில் பல ஏழைச் சைவச்சிறுவர்களை கடந்த காலங்களில் கிருஸ்தவ மதக்குழுக்கள் மதமாற்றியமை யாவரும் அறிந்ததே. கிழக்கில் பல சைவக் குடும்பங்களை இஸ்லாமிய மதத்தவர்கள் தினமும் மதமாற்றிய வண்ணம் உள்ளனர்.

இச்சூழ்நிலையில் சைவமக்கள் மிகுந்த அதிர்ச்சியோடு எதிர்காலம் என்னவாகுமோ? என்ற கேள்வியோடு வாழ்கிறார்கள். இவ்விடயம் தொடர்பாக தாங்கள் உடன் கவனம் செலுத்தி தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என நன்றியோடு வேண்டிக் கொள்கிறோம் என அவர் அனுப்பியுள்ள கடிதத்தில்  கேட்டுள்ளார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget