அவரது கருத்துக்கள் உள்ளகப்பொறிமுறை மற்றும் உள்நாட்டுக் கட்டமைப்புக்களின் ஊடாக நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் ஆகியவற்றை உறுதிசெய்வது குறித்து தாம் கொண்டிருக்கும் உறுதிப்பாடு தொடர்பில் சந்தேகங்களைத் தோற்றுவிக்கும் வகையில் அமைந்திருப்பதாகவும் அதிருப்தி வெளியிட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியப் பாராளுமன்ற உபகுழுவின் அமர்வு கடந்த ஜனவரி மாதம் 27 ஆம் திகதி நிகழ்நிலையில் நடைபெற்றபோது அதில் இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பிலும் ஆராயப்பட்டது.
அந்த அமர்வில் பங்கேற்று இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் குறித்துத் தெளிவுபடுத்திய மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளரும் சட்டத்தரணியுமான அம்பிகா சற்குணநாதன் அண்மைய காலங்களில் மனித உரிமைகள் நிலைவரம் மிகமோசமடைந்து வருவதாகச் சுட்டிக்காட்டினார்.
அதுமாத்திரமன்றி ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் அலுவலகத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள ஆதாரங்களைத் திரட்டுவதற்கான பொறிமுறைக்கு ஐரோப்பிய ஒன்றிய உறுப்புநாடுகள் நிதியுதவி உள்ளிட்ட ஒத்துழைப்புக்களை வழங்க முன்வரவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியிருந்தார்.
இந்நிலையில் அந்த அமர்வில் சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதனால் வெளியிடப்பட்ட மறுப்பு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
ஐரோப்பிய ஒன்றியப் பாராளுமன்றத்தின் உபகுழுவில் இலங்கையின் மனித உரிமைகள் மற்றும் தொழிலாளர் உரிமைகள் தொடர்பில் நீலன் திருச்செல்வம் அறக்கட்டளையின் தலைவி அம்பிகா சற்குணநாதனால் வழங்கப்பட்ட சாட்சியத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள தவறான விடயங்கள் குறித்து கவலையுடன் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
அவரால் முன்வைக்கப்பட்ட கருத்துக்கள் இலங்கை அரசாங்கம் பல முனைகளிலும் அடைந்திருக்கக்கூடிய முன்னேற்றத்தைப் புறக்கணிக்கும். அதேவேளை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையுடனான நீண்டகால ஒத்துழைப்பின் அடிப்படையில் உள்ளகப்பொறிமுறை மற்றும் உள்ளகக்கட்டமைப்புக்களின் ஊடாக நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் ஆகியவற்றை உறுதிசெய்தல் தொடர்பில் அரசாங்கம் கொண்டிருக்கின்ற கடப்பாடு குறித்த சந்தேகங்களையும் தோற்றுவிக்கின்றது.
மனித உரிமைகள் உறுதிசெய்யப்படுவதை முன்னிறுத்திய அழுத்தங்களைப் பிரயோகிப்பதற்கான ஆயுதமாக ஐரோப்பிய ஒன்றியம் அதன் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையைப் பயன்படுத்தவேண்டும் என்று அம்பிகா சற்குணநாதன் பரிந்துரைத்துள்ளமை ஏமாற்றமளிக்கின்றது.
குறிப்பாக கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பெருமளவான மக்கள் வாழ்வாதார ரீதியில் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை இலங்கை இழக்கும் பட்சத்தில் வறுமை மற்றும் வருமான சமத்துவமின்மை என்பன மேலும் அதிகரிக்கும்.
அதேபோன்று சமூகங்களுக்கு இடையில் இனரீதியான பாகுபாடு காண்பிக்கப்படுவதாக அவரால் முன்வைக்கப்பட்ட கருத்தானது, கடந்த காலத்தில் சமூகங்களுக்கு இடையில் வெறுப்புணர்வைத் தூண்டிய தமிழீழ விடுதலைப்புலிகளின் பிரசாரத்தை நினைவூட்டுவதாக அமைந்துள்ளது.
'தண்டனை விதிக்கப்படாத போக்கு' தொடர்பில் அம்பிகா சற்குணநாதனால் முன்வைக்கப்பட்ட கருத்துக்களை நாம் மறுக்கின்றோம். சிவில் சமூக இடைவெளி சுருங்கி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளமை ஏமாற்றமளிக்கின்றது.
அரச சார்பற்ற அமைப்புக்களை அரசாங்கம் அதன் பங்காளியாகக் கருதுகின்றதேயன்றி, விரோதிகளாகப் பார்க்கவில்லை என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகின்றோம் என்று அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Post a Comment