மதிப்பிழந்த பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்தி இலங்கை அரசாங்கம் மோசமான துஸ்பிரயோகங்களில் ஈடுபடுகின்றது என தெரிவித்துள்ள சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் இந்த சட்டத்தை கைவிடுமாறு இலங்கை அரசாங்கத்திற்கு ஐரோப்பிய ஒன்றியம் அழுத்தங்களை கொடுக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இத்தடைச்சட்டத்தை பயன்படுத்தி நீண்டகாலமாக தன்னிச்சையாக தடுத்துவைத்திருத்தல், சித்திரவதைகள் போன்றவற்றில் இலங்கை அரசாங்கம் ஈடுபடுகின்றது என மனித உரிமை கண்காணிப்பகம் குற்றம் சாட்டியுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியமும், இலங்கையின் ஏனைய வர்த்தக சகாக்களும், நிதி வழங்குநர்களும் குறிப்பிட்ட கால எல்லைக்குள் இலங்கை அரசாங்கம் இந்த சட்டத்தை கைவிடவேண்டும் என அழுத்தங்களை கொடுக்க வேண்டும் என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
பரந்துபட்ட துஸ்பிரயோகங்களை முடிவிற்கு கொண்டுவருவதற்கு உதவாத உத்தேச திருத்தங்களை நிராகரிக்கவேண்டும் எனவும் சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதாக முன்னைய அரசாங்கங்கள் அளித்த வாக்குறுதிகளை மறுத்துவிட்டு இலக்கு வைக்கப்பட்ட பொதுமக்களின் அடிப்படை உரிமைகளை பறிப்பதற்காக இலங்கை அதிகாரிகள் தொடர்ந்தும் பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்துகின்றனர் என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகத்தின் தென்னாசியாவிற்கான இயக்குநர் மீனாக்சி கங்குலி தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் முன்வைத்துள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் முன்மொழியப்பட்ட திருத்தங்கள் துஸ்பிரயோகங்களிற்கு முடிவு காண்பதை நோக்கமாக கொண்டவையில்லை, மாறாக ஐரோப்பிய ஒன்றியத்தினதும், ஏனைய நாடுகளினதும் கவலைகளிற்கு தீர்வை காண்பதற்கான அரசாங்கத்தின் முயற்சி போல தோன்றுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியம், ஐக்கிய இராச்சியம், அமெரிக்கா ஆகியன இலங்கை அரசாங்கம் அதன் கடப்பாடுகளை ஏற்று மனித உரிமைகளை பாதுகாப்பதற்கான அர்த்தமுள்ள நடவடிக்கைகளை எடுக்க அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Post a Comment