Ads (728x90)

அனைத்து அரசியல்வாதிகளும் கணக்காய்விற்கு உட்படுத்தப்பட வேண்டும் என 96.2 சதவீத இலங்கையர்கள் தெரிவித்துள்ளனர். 

அவர்களது கணக்கில் காட்டப்படாத சொத்துக்கள் அனைத்தும் அரசால் பறிமுதல் செய்யப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர். 

மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் இந்த கருத்துக்கணிப்பில் பத்தில் ஒன்பது இலங்கையர்கள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ இராஜினாமா செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர். ராஜபக்ஸ குடும்பம் இலங்கை அரசியலில் இருந்து வெளியேற வேண்டும் என்றும் அவர்கள் விரும்புகின்றனர்.  

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ பதவி விலக வேண்டும் என்று 87 சதவீதத்தினர் தெரிவித்துள்ளனர். 75 சதவீதத்தினர் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை ஒழிக்கப்பட வேண்டும் என்று விரும்புகின்றனர். 

மேலும் நாட்டில் பாதிக்கும் மேற்பட்டோர் அதாவது 55 சதவீதத்தினர் பாராளுமன்ற உறுப்பினர்கள் 225 பேரும் இராஜினாமா செய்ய வேண்டும் என விரும்புகின்றனர்.

88 சதவீத இலங்கையர்கள் கடந்த ஒரு மாத காலமாக எரிவாயு, எரிபொருள், பால் மா மற்றும் உரம் போன்ற அத்தியாவசியப் பொருட்களுக்காக வரிசையில் நிற்பதாகவும் கருத்துக்கணிப்பு காட்டுகின்றது.

மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தினால் தயாரிக்கப்பட்ட ஜனநாயக ஆளுகைச் சுட்டெண்ணின்படி (Democratic Governance Index ) தற்போதைய பொருளாதார நெருக்கடியின் விளைவாக 90 சதவீத இலங்கையர்கள் தங்களது அல்லது குடும்பத்தினரது வருமானத்தில் பாதிப்பை சந்தித்துள்ளனர். 

58 சதவீதத்தினர் நாட்டின் பொருளாதாரம் வழமைக்குத் திரும்ப நீண்ட காலம் செல்லும் என நம்புகின்றனர். 90 சதவீதத்தினர் இந்த நெருக்கடிக்கு அரசியல் காரணங்களே காரணம் என்று கூறியுள்ளனர்.

வடிவமைக்கப்பட்ட வினாத்தாளைக் கொண்டு  நான்கு முக்கிய இன சமூகங்களில் இருந்து 1,200 பேரிடம் இந்த கருத்துக்கணிப்பு மேற்கொள்ளப்பட்டதாக மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் தெரிவித்துள்ளது.

அனைத்து மாவட்டங்களிலும் உள்ள நகர்ப்புற மற்றும் கிராமப்புற பகுதிகளில் இருந்து ஆண், பெண் இருபாலரிடமும் மாதிரி வினாத்தாள்கள் விநியோகிக்கப்பட்டு கருத்துக்கணிப்பு மேற்கொள்ளப்பட்டதாக மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் தெரிவித்துள்ளது.

தேசிய வாக்கெடுப்பிற்கான களப்பணி 2022 ஏப்ரல் 19 முதல் 25 வரை நடத்தப்பட்டுள்ளது. 



Post a Comment

Recent News

Recent Posts Widget