Ads (728x90)

நாட்டின் தற்போதைய நெருக்கடிகளுக்கு தீர்வினை வழங்கி மக்களுக்கு நிவாரணம் பெற்றுக்கொடுப்பதற்காக மகாநாயக்க தேரர்கள் முன்வைத்த யோசனைகளை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு கோரி சுதந்திர சதுக்கத்தில் நேற்று மகா சங்கத்தினர் பிரகடனம் ஒன்றை வௌியிட்டுள்ளனர்.

மூன்று பீடங்களையும் சேர்ந்த 1,000 தேரர்கள் அகில இலங்கை பௌத்த மகா சம்மேளனத்தில் இருந்து சுதந்திர சதுக்கத்திற்கு பேரணியொன்றை முன்னெடுத்தனர்.

மகாநாயக்க தேரர்களின் அறிவிப்பை செயற்படுத்துமாறு வலியுறுத்தும் மகா சங்கத்தினரின் கட்டளைக்கான மாநாடு என இந்த நிகழ்விற்கு பெயர் சூட்டப்பட்டிருந்தது.

நாட்டை மீட்டெடுத்து மக்களின் எதிர்ப்பை தணியச் செய்து, வீழ்ச்சியடைந்த மக்களின் வாழ்க்கையை மீளக்கட்டியெழுப்ப வேண்டும் என மகா சங்கத்தினரால் முன்வைக்கப்பட்ட பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இடைக்கால அரசாங்கம் தொடர்பில் மகாநாயக்க தேரர்கள் வழங்கியுள்ள ஆலோசனைகள் புறக்கணிக்கப்பட்டால் இதுவரை வழங்கப்பட்ட ஆசீர்வாதங்கள் அனைத்தும் சாபமாக மாறும் என்பதை அரச தலைவர்கள் நினைவில் கொள்ள வேண்டும். எதிர்க்கட்சியினரும் தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் சுயநல அரசியல் நோக்கில் செயற்படக் கூடாது என ஓமல்பே சோபித தேரர் தெரிவித்தார்.

குறுகிய அரசியல் நோக்கிற்காக அரசியல்வாதிகள் தமிழ், முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக கடந்த காலங்களில் கட்டவிழ்த்து விட்ட அடக்குமுறைகள், இனவாத செயற்பாடுகளுக்கு பௌத்த மதத்தலைவர்களில் ஒருசிலர் துணை சென்றுள்ளமை வேதனைக்குரியது எனவும் அதிருப்தி வெளியிட்டார்.

ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷவின் தவறான நிர்வாகத்தினால் நாடு பாரிய விளைவுகளை எதிர்கொண்டுள்ளது. நாகரீமான முறையில் ஆடையணிந்து வெளிநாடுகளில் யாசகம் பெறும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

இலங்கையின் பொருளாதார நெருக்கடியினை கருத்திற்கொண்டு நட்பு நாடுகள் மனிதாபிமான அடிப்படையில் இலங்கைக்கு உதவிக் கரம் நீட்டியுள்ளமை வரவேற்கத்தக்கது எனவும் தெரிவித்தார்.



Post a Comment

Recent News

Recent Posts Widget